கொழும்பில் இணைந்த எதிர்க் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாடு-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு, இரு வருடங்களுக்குள் தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இணைந்த எதிர்க்கட்சிகள், கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில், இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மதித்து, நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சீர்திருத்தங்களை பயன்படுத்த வேண்டும் என ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீர்திருத்தங்களுக்கு ஐக்கியப்பட்ட முயற்சிகள் ஆதரவு வழங்கவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இணைந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்காத நிலையில் அவருடைய சட்டத்தரணி உபுல் குமாரபெரும் ஊடாக அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுபவர், தனது கட்சிக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் நேர்மையானவராகவும் இருப்பாராயின், நிச்சயம் அவருக்கு ஆதரவளிப்பதாக, முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பாடு-
ஐக்கிய நாடுகள் ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையின் முன்னாள் தலைவர் கியாம்பாலோ பியோலி இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என அது தெரிவித்துள்ளது. பியோலி தனது மேன்ஹட்டனில் உள்ள வீட்டை, ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவிற்கு வாடகைக்கு வழங்கியுட்டுள்ளார். போர்க்குற்றச் செயல்கள் நிராகரிக்கும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் காணொளியொன்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சில ஊடக நிறுவனங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட தடைகள் ஏற்படுத்தப்படுவதுடன் அனுமதி மறுக்கப்படுகின்றது. கடந்த சில காலங்களாகவே இன்னர் சிற்றி பிரஸ் நிறுவனத்திற்கு செய்தி சேகரிக்க தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பியோலியின் நடவடிக்கைளுக்கு சில ஊடகங்கள் ஆதரவளித்து வருகின்றன எனவும் இன்னர் சிற்றி பிரஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை-
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிங்கள மொழியில் உள்ள தீர்ப்பாணை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறந்த சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மேன்முறையீட்டுக்கான செலவுக்காக தமிழக அரசு, 20 இலட்சம் ரூபாவை இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறாது என முதல்வர் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் நேற்றுக்காலை தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது இதன்போது இலங்கையில் மரண தண்டனை பெற்றுள்ள ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுவதற்கு இணங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மங்கள வந்தால் அமைச்சை விட்டுக் கொடுக்கத் தயார் – பிரியங்கர ஜயரத்ன-
கட்சியை விட்டுச் சென்ற மங்கள சமரவீர எம்.பி மீண்டும் கட்சிக்கு வருவாராயின் அவருக்கு தனது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஆனமடுவ அலுவலக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கூறுகையில், ´மங்கள சமரவீரவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி என்பது புதிய இடம் அல்ல. நாம் இருந்த இருப்பில் மன கசப்பு ஏற்பட்டால் எதிர்வீட்டுக்குச் செல்வோம். ஆனால் பின்னர் வீட்டுக்கு வருவோம். மங்கள மீண்டும் வர முடிவு செய்துள்ளமை சிறந்தது. தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்ய முடியாது என அவருக்குத் தெரியும். பழையதை மறந்துவிட்டு வாருங்கள் பெரிய வீட்டுக்கு. உங்களை வெறுமனே பொறுபேற்க மாட்டோம். பொறுப்பு கொடுத்து சேர்த்துக் கொள்வோம். அதற்கு நான் எனது அமைச்சுப் பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார். நாம் நமது நாட்டுக்காக உயிரையே கொடுப்போம் என்றார் அவர்.
புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது-
கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கடந்த 9 வருடங்களாக தேடப்பட்டு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ம புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரை மாறுவேடத்தில் இருந்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலிகள் இயக்க சங்கர் அணியைச் சேர்ந்த ராசா என்றழைப்பட்ட சின்னவன் மணிமாறன் என்பவரையே தாம் கைதுசெய்திருப்பதாக பொலிஸ் அதிகாரி ஆர். புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த இச்சந்தேகநபர், 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொலை, கொள்ளை மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காததால் அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர் அக்கரைப்பற்று, அட்டப்பள்ளம் அல்லிமுல்லைச் சந்தியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மாம்பழ வியாபாரிகள் போல் தாங்கள் மாறுவேடத்தில் இருந்தே சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் அதிகாரி புருஷோத்தமன் மேலும் கூறியுள்ளார்.
மீரியபெத்தை மண்சரிவில் 37 பேரே பலியாகினர் – அமைச்சர் தகவல்-
மீரியபெத்தை மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மண்சரிவுக்குள் சிக்கிய 13 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மண்சரிவுக்குள் சிக்கிய மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடடுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு மரண சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, மீரியபெத்தை மண்சரிவு பகுதி பாதுகாக்கப்பட்டு அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலை 30வது பட்டமளிப்பு விழா-
யாழ். பல்கலைக்கழக 30வது பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதம அதிதியாக பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பட்டத்தினை வழங்கி வைத்தார். மேற்படி 30வது பட்டமளிப்பு விழாவில் 1372 மாணவர்களுக்கு பட்டமளிகக்கப்பட்ப்படவுள்ள நிலையில், இன்று 674 மாணவர்களுக்கு பட்டமளிப்பு நடைபெற்றது. நாளை நடைபெறவுள்ள அடுத்த அமர்லில் ஏனைய மாணவர்களுக்கான பட்டமளிப்புக்கள் நடைபெறவுள்ளன. முதலாவது அமர்வு மாணவர்களுக்கான பட்டமளிப்பில் சட்டத்துறை, மருத்துவம், தாதியர், பார்மசி உள்ளிட்ட துறைகளிலும், இரண்டாவது அமர்வில், கணிதம் விஞ்ஞானம் உட்பட தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட பல துறைகளில் பட்டமளிப்புக்கள் நடைபெற்றன.
யாழில் ”ஐஸ்கிறீம், பழச்சாறு” தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்-
யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாழ் முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கொடும்பாவியும் எரிக்கப்பட்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திடம் மகஜர்களை கையளித்துள்ளனர்
யாழ்ப்பாணத்திற்கு புதிய தொடரூந்து சேவை-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய தொடரூந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தொடரூந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு குறித்த தொடரூந்து கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான தொடரூந்து சேவைகளில் நிலவும் சனநெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 25 தினங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த தொடரூந்து சேவைகளின் ஊடாக 8 கோடி ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது என பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.