ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு மூன்றாவது முறை போட்டியிடலாம் – சபை முதல்வர்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறும் வேளை அங்கு உரையாற்றும் போதே சபை முதல்வரான நிமல் சிறிபால.டி.சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது தடவை போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி உயர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கான உயர் நீதிமன்ற பதில் நேற்று அவரிடம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு-

தேசிய தேர்தல்களில் தமது சுய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் அத்தியாவசிய தேவைக்காக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களை தெளிவுபடுத்தும் வாரம் அமுலில் உள்ளது. நேற்று தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதிவரை இந்த தெளிவுபடுத்தல் நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கபே அமைப்பு மற்றும் இலங்கை மனிதவுரிமைகள் கேந்திர நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்வு இன்று ஊவா பரணகம பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக கபே அமைப்பு பொதுமக்களை தெளிவுபடுத்தி வருகின்றது. இதன்படி 2014ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலின்போதும் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றுள்ள 4 லட்சம் பேருக்கு எதிர்வரும் 2 மாதங்களுள் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு-

ஏ9 வீதியின் முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்வதற்காக குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோது யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் அவர்கள்மீது இன்றுமுற்பகல் 9.45 அளவில் மோதியுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துடன் தொடர்படைய டிப்பர் வாகன சாரதி தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சௌபாக்கியமான நாடுகளில் இலங்கை 62 வது இடம்-

உலகின் சௌபாக்கியமான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 62ம் இடம் கிடைத்துள்ளது. லெகோ என்ற சர்வதேச நிறுவனம் உலகின் சௌபாக்கியமான நாடுகளை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 62 ஆம் இடத்தைப் பெற்றுள்ள்ளது. உலகின் மிகவும் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டில் இலங்கை 60வது இடத்தில் இருந்த போதும் இந்த ஆண்டு சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் 62ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 142 நாடுகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொலிஸ் அதிகாரிகளின் ஆவணங்களைக் களவாடிய இருவர் கைது-

பொலிஸ் அதிகாரிகள் இருவரின் ஆவணங்களை களவாடிய குற்றச்சாட்டில் மட்டக்குளி பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மட்டக்குளி பொலிஸ் நிலைய விசேட பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் ஆவணங்களை களவாடிச் சென்று எரித்ததாக பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அலுவலகத்தில் இலகுவாக விண்ணப்பம் பெறலாம் – பிரபா கணேசன்-

அரச தொடர்மாடி வீடுகளுக்கான விண்ணப்பங்களை தனது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். நேற்றுமாலை வடகொழும்பில் இந்த விண்ணப்பங்களை மக்களுக்கு கையளிக்கவிருந்த போதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தமையால் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றீடாக பம்பலப்பிட்டியிலுள்ள தனது அலுவலகத்தில் சனி ஞாயிறு தினங்களில் காலை 10மணிமுதல் மாலை 4.00 மணிவரை இலகுவான முறையில் விண்ணப்பங்களை பெறமுடியும் என அவர் கூறியுள்ளார். நேற்றுமாலை மட்டக்குளி சென்.ஜோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தின்போது விண்ணப்பப் படிவங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரேப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம்- 

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் எந்த வகையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட கூடாது என ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராகவும், தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீகோத்தா கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் தொடரூந்து சேவையில் 80 மில்லியன் ரூபா வருமானம்-

யாழ்ப்பாணம் கொழும்பு தொடரூந்து போக்குவரத்தின் மூலம் கடந்த 25 நாட்களில் 80 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப்பபெற்றுள்ளது. இதன் மூலம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தின் ஒரு நாள் வருமானம் ஒரு மில்லியனினால் அதிகரித்துள்ளது. அத்துடன், மக்களின் கோரிக்கையின் போரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய தொடரூந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து முற்பகல் 10 மணிக்கும் இந்த தொடரூந்து தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உபேக்ஷா நியமனம்-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.