மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்-

meenavarkalin marana thandanaiyaiமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மியான்மருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடியின் குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் மத்திய அரசு உச்சபட்ச கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சையத் அக்பருதீன் தெரிவித்தார். தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் திகதி தூக்குத் தண்டனை விதித்தது. 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான 20 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிங்கள மொழியில் இருந்தால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. மேல்முறையீட்டு வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக இலங்கை ஜனாதிபதியின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களின் ஒருவரான எஸ்.அனில் சில்வா இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கறிஞர் எஸ்.அனில் சில்வா கூறும்போது, “திங்கட்கிழமையே மேல்முறையீடு செய்ய இருந்தோம். ஆனால் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு ஆவணங்களை பார்வையிட விரும்பியது. செவ்வாய்க்கிழமை தூதரகத்தின் அனுமதிக்கு பின்னர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த வழக்கை விசாரணை திகதியை நீதிமன்றம் விரைவில் அறிவிக்கும்” என்று கூறியுள்ளார்.