அமைச்சுப் பதவியை ஏற்பேன்: மங்கள சமரவீர எம்.பி-
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தான் அமைச்சு பதவியே ஏற்று அமைச்சராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். எந்த காரணத்துக்காகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமாட்டேன் என்றும் அமைச்சு பதவிக்காக பேச்சு நடைபெறுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எந்தவொரு அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் ஆட்சியமைக்கவிருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்திலேயே நான் அமைச்சராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை-
மன்னார் – வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு 8.50 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள், வீட்டிலிருந்தவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் முன்பு புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேசன் வேலை செய்து வாழ்க்கையை நடத்திவரும் இவர், சம்பவதினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காட்டுப்புலம் மாதகல் வீதி புனரமைப்பு-
யாழ். வலி மேற்கு பிரதேசத்தில் பல இலட்சங்கள் செலவில் வீதிகள் வலி மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றது. மிக நீண்ட யுத்தத்தின் பின் வலி மேற்கு பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பகுதிகளில் காட்டுப்புலம் பிரதேசமும் ஒன்றாகும். இப் பிரதேசத்தில் வீதிகள் மற்றும் மதவுகள் அமைக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில் மேற்படி வீதி மாகாண சபை நிதி மூலம் 6.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமான முறையில் குடிநீர் விநியோகம் வலிமேற்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.
வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்-
வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் வடக்குக்கான இரவு நேர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தெற்கிலிருந்து வடக்குக்கு 21 ஆயிரம் பயணிகளும் வடக்கிலிருந்து தெற்குக்கு 28 ஆயிரம் பயணிகளும் முதல் மாதத்தில் பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு ரயில் சேவைக்கான சாதாரண கட்டணம் 320 ரூபாயாகும். யாழில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், ரயில் சேவை மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றன என யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறியுள்ளார்.
வட்டு தெற்கு முதலி கோவிலடிப்பகுதி அரசடி வீதி புனரமைப்பு-
மிக நீண்ட காலமாக புனரமைப்புக்கு உட்படாது இருந்த யாழ்ப்பாணம் வட்டு தெற்கு முதலி கோவிலடிப்பகுதியில் உள்ள அரசடி வீதி தொடர்பில் அப்பகுதி மக்கள் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததை அடுத்து தவிசாளர் இவ் வீதி தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ. சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்திருந்தார். இதனை அடுத்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலமாக ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை-
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தி இந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதான தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்ததாக தி இந்து பத்திரிகை, நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மொஹான் சமரநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது-
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது என இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு இன்றும் கிடைக்கவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இலங்கை அகதிகள் நாடு திரும்ப அச்சமடைகிறார்கள், இலங்கையில் மறுவாழ்வுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என வாசன் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மொரித்தானியா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, மொரித்தானிய ஜனாதிபதி முஹமட் அப்துல் அசிஸ் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவரின் இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கிடையிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ம் ஆண்டில் இருந்து, மொரித்தானியா நாட்டுடன் இலங்கை முறையான தூதரக உறவுகளை பேணி வருகின்றன. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் 2012 மற்றும் 2013ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கைக்கு சார்பாக இருந்த நாடுகளில் மொரித்தானிய அரசாங்கமும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கொள்கலன் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது-
கொள்கலன் சாரதிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொள்கலன் வாகனங்களை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்றிரவு முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது-
சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் புத்தளம் பொலிஸ் மோட்டார் வாகனப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் துப்பாக்கிகளை கொண்டு சென்றபோதே, நேற்றுமாலை புத்தளம் – கல்குளிய பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேலியகொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்-
கொழும்பு, பேலியகொட – நுகேவீதி சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுகாலை 10.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சிறு சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்ட நிலையில் இவர் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.