வடமாகாண சபையின் காணி விபரத் திரட்டல்-

வடமாகாணத்தின் காணி விபரங்களை வடமாகாண சபை திரட்டி வருகிறது. இதற்காக வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக, வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அண்மையில் வடமாகாண சபையில் திர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி தங்களுக்கான ஆவணம் ஒன்றை தயாரித்துக் கொள்ளும் நோக்கில், பொதுமக்களின் காணிகள், அரச காணிகள், பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் மற்றும் கட்டிடங்கள் குறித்த தகவலை ஆவணப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான தகவல்களை திரட்டுமாறு வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏறகனவே கடந்த மாதம் 30ம் திகதி வடமாகாண சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது என அவர் மேலும் கூறியுள்ளார்.

கொஸ்லாந்தையில் 131 பேர் இடம்பெயர்வு-

பதுளை மாவட்டம் கொஸ்லாந்தைப் பகுதியில் மண்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தினால் இடம்பெயர்ந்த 131 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் சிறி கணேசா தமிழ் வித்தியலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 29 மண்சரிவு இடம்பெற்ற மீரியாபெத்த தோட்டத்துக்கு அருகிலேயே நேற்றையதினம் நில வெடிப்பொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கட்டிட ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அங்கு மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப குறியீடுகள் தென்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றை தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொஸ்லாந்தை பிரதேச மக்கள், மீண்டும் முகாமிற்கே திருப்பி அழைக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் மனு தாக்கல் செய்யும் எண்ணமில்லை-அமைச்சர் பீரிஸ்-

புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். இந்த தடை நீக்கத்துக்கு எதிரான மேன்முறையீடு செய்யப்படுமா? என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் வழங்கும்போது, அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். எனினும் இவ்வாறான மேன்முறையீடு ஒன்றை செய்து, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற விவாதத்தின் வாதியாக செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு மன்னார் நீதவான் எச்சரிக்கை-

பொய்யான தகவலை வழங்கியமைக்காக பொலிஸாருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மயங்கி விழுந்தமை தொடர்பில் பொலிஸார் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை சட்ட வைத்திய அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் பொலிஸாருக்கு நேற்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு வட பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு, மன்னார் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த சந்தேகநபர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இது ஒரு மனித உரிமை மீறல் எனவும் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தளத்தில் வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிப் பிரயோகம்-

புத்தளம் கரம்பைப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டினால் வர்த்த நிலையத்தின் கதவுகள் சேதமடைந்துள்ளன. காணிப் பிரச்சினை தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலேயே இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு புதிய கடுகதி ரயில் சேவை-

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்றிரவு முதல் புதிய கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படவுள்ள புதிய கடுகதி ரயில், மறுநாள் காலை 6.55க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த கடுகதி ரயில், கோட்டையிலிருந்து கிளிநொச்சி வரை கடுகதி ரயிலாக பயணிக்கவுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை சகல ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிறுத்தப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் கூறியுள்ளார்.