தேர்தல் அறிவிப்பின் பின்னரே பொது வேட்பாளர் அறிவிப்பு-ரணில்-
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள பொது வேட்பாளர் குறித்து, இந்த தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னரே அறிவிக்கப்படும் என ஐ.தே.கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் ஒன்று அடுத்த வருடம் நடைபெறும் என்று ஜனாதிபதியே கூறி வருகிறார். இது இன்னமும் உறுதியாக தெரியாகவில்லை. தற்போது இந்த தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகி வருகின்றபோது, தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர் எங்களின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும். தேர்தலுக்கான எதிர்க்கட்சியின் வளங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே தேர்தல் அறிவிப்பின் பின்னரே எங்களின் பொது வேட்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
கோரிக்கைகள் தொடர்பில் ஒளிவு மறைவின்றி பேச வேண்டும்-கூட்டமைப்பு-
தங்களின் கோரிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர், ஒளிவு மறைவின்றி திறந்த மனதான பதில்களை வழங்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, தாங்கள் முன்வைக்கின்ற மூன்று கோரிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கைகளை தங்களிடம் நேரடியாக முன்வைத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் தெரிவித்திருந்தன. இந்நிலையில் குறித்த கட்சிகளிடம், தங்களின் கோரிக்கைகள் நேரடியாக முன்வைக்கப்படுமா? என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்கள், இந்த விடயங்களை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஊடகங்கள் வாயிலாக தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளாங்குளம் துப்பாக்கிச்சூடு தொடர்பில் நால்வர் கைது-
மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நால்வர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணசாமி புகுனேஷ்வரன் என்பவரரே கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரழந்தவர் புணர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
செல்போன் மூலம் அபராதம் செலுத்தும் முறை அறிமுகம்-
மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்த, கையடக்கத் தொலைபேசி மற்றும் கிரடிட் காட்களை பயன்படுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அபராதம் செலுத்தும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார். இவ்வருட இறுதியில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எந்த ஒரு கையடக்கத் தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் இவ்வாறு அபராதத் தொகையை செலுத்துவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனங்கள் தொடர்பான தவறுகளுக்காக அபராதம் செலுத்துவது தொடர்பில் எதிர்நோக்கிவரும் சிரமங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சிய பதிவை நிறுத்திய ஐ.நா-
இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடாத்தும் விசாரணைக்கான சாட்சியங்கள் பெற்றுக் கொள்வது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா மனித ஆணைக்குழு அலுவலகத்தின் விசாரணைக்குழுவிற்கு போர்க்குற்றம் குறித்து சாட்சியங்களை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை கடந்த 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றன. எனவே தற்போது முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கால எல்லை அதிகரிப்புக்கு இலங்கை அரசு ஆட்சேபம் வெளியிட்டு வருகின்றது.
கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு-
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ். புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது- 09) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோது தவறி வீழ்ந்துள்ளான் என்றும், சிறுவனை நீண்டநேரமாகக் காணாத உறவினர்கள், தேடியபோது சிறுவன் நீரில் மூழ்கியமை தெரியவந்தது என்றும், இது குறித்து தமக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சேகுவேரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு-
உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் இரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன. 2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்தபோது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், ஒரு படத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் இருப்பது போன்றும், மற்றொரு படத்தில் சேகுவாராவின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதும் இருக்கின்றன. சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் மார்க் ஹட்டனால் எடுக்கப்பட்ட புகைப்படமே சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அதுதவிர, வேறு எந்தப் படமும் வெளியாகியிருக்கவில்லை. எனவே இந்த புகைப்படங்களை மதபோதகர் கார்டேராவிடம் மார்க் ஹட்டனே கொடுத்திருக்கலாம் என இமானுல் குறிப்பிட்டுள்ளார்.