தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்’: சொல்ஹெய்ம் (BBC)
இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நோர்வேயின் பங்களிப்புடன் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் 2006-ம் ஆண்டு ஏப்ரலுடன் முறிவடைந்தது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த நிலையில் 2009-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் உச்சத்தில், 2010-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் தவணைக்காக வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷ, இப்போது மூன்றாவது தவணைக்காகவும் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் சூடுபிடித்துவருகின்றன. வடக்கு பிராந்தியத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியில், வட மேல் மாகாணத்தில் குருநாகல் நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோதே மகிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம் மீதான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.
‘புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சொல்ஹெய்ம் கூறினார்’: மகிந்த
‘அன்று சொல்ஹெய்ம் வந்து என்னிடம் என்ன கூறினார். உங்களின் இராணுவத்தால் எந்தவழிகளிலும் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று கூறினார். அவர் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் மிகவும் வல்லவர், ஜீனியர்ஸ் என்று கூறினார். நான் ஒரு பதில் தான் அவரிடம் கூறினேன். அவர் வடக்கு காட்டில் பிறந்த மனிதர். நான் தெற்கு காட்டில் பிறந்த மனிதர் என்று அவருக்கு பதில் கூறினேன்’ என்று கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ. நோர்வேயின் சாமாதானத் தூதுவர் சோல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும், அது தொடர்பில் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் சரியென்றால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி இங்கு கூறினார். 1999-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில், இலங்கையில் அமைதி முயற்சிகளில் சுமார் 7 ஆண்டுகாலம் சொல்ஹெய்ம் முக்கிய பங்காற்றியிருந்தார் இலங்கையின் போர்க்கால அழிவுகள் தொடர்பில் நடத்தப்படக்கூடிய எந்தவொரு சர்வதேச விசாரணைகளுக்கும் சென்று சாட்சியம் அளிப்பதற்கு எரிக் சொல்ஹெய்ம் விருப்பம் தெரிவித்துள்ளதாகஅண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், தேர்தல் நெருங்குவதால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னைப் பற்றி பொய்கூறியுள்ளதாகவும், உண்மை நிலையை தெளிவுபடுத்துவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘மகிந்தவுக்கு எல்லாம் தெரிந்தே நடந்தன’: சொல்ஹெய்ம்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதரும் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, குருநாகலில் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, சமாதான பேச்சுக்காலத்தில் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், நோர்வே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக எரிக் சொல்ஹெய்ம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியிருக்கின்ற தறுவாயில் மகிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்று தான் ஊகங்களை வெளிப்படுத்தப்போவதில்லை என்று கூறியிருக்கின்ற எரிக் சொல்ஹெய்ம், நடக்கவிருக்கின்ற தேர்தலில் தனது பெயர் எந்தவித்திலும் இழுக்கப்படுவதை அனுமதிக்கும் எண்ணம் தனக்கு காரணத்தினால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக எல்லோரும் அறிந்திருக்கின்ற வெளிப்படையான தகவல்களை மீண்டும் தான் வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றார்.
புலிகளின் சமாதான செயலகத்திற்கு உதவி
இலங்கையில் 7 ஆண்டு காலம் சமாதானப் பணிகளில் சொல்ஹெய்ம் ஈடுபட்டிருந்தார் இலங்கையின் அமைதி முயற்சிகளுக்கு ஏற்பாட்டாளராக, மூன்றாவது தரப்பாக பங்கெடுத்திருந்திருந்த நோர்வே அரசு ஒருபோதும் விடுதலைப் புலிகளுக்கு பொதுவான அடிப்படைகளிலோ அல்லது அவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு குறிப்பாகவோ நிதி வழங்கவில்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அப்போது நடந்துவந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு உதவும் முகமாக, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு பொருளாதார ரீதியான வளங்களை நோர்வே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேயே புலிகளுக்கு வானொலி ஒலிபரப்புக் கருவி ஒன்றை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படியான உதவிகள், வேறு வேறு தலைவர்களின் கீழிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரிந்தே இருந்ததாகவும், அதில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலமும் அடங்கும் என்றும் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாங்கள் மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக வெளிப்படையாகவே நடந்துகொண்டதாகவும் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதர் கூறுகின்றார்.
‘மகிந்த ஊக்குவித்தார்’
மூன்றாவது தவணைக்காகவும் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாகக் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு முன்னமே பல தடவைகள் அவரைத் தான் சந்தித்திருப்பதாகவும், அமைதிச் செயற்பாடுகளின் முழுவிபரங்களையும் அவருக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவும் கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், தங்களின் சமாதான நோக்கங்களுக்கு மகிந்த ராஜபக்ஷ, அமைச்சராக இருந்தபோதும் பிரதமராக இருந்தபோதும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் நோர்வேயை ஊக்குவித்ததுடன் தொடர்ந்தும் தனக்கு முன்னேற்றங்கள் குறித்து தெரியப்படுத்துமாறு கோரியிருந்தாகவும், அக்காலத்தில் அளிக்கப்பட்ட அந்த பலனுள்ள ஒத்துழைப்புகளுக்காக தாங்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
சமாதான முயற்சிகளின் ஏற்பாட்டாளராக நோர்வே தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்ததாகவும், தன்னை இலங்கைக்கு வருமாறு தனிப்பட்ட அழைப்பை விடுத்திருந்ததாகவும் கூறுகின்ற நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி விவகார அமைச்சர், அதன்பின்னர், பல தடவைகள், தன்சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அரசியல் ரீதியான செய்திகளை கொண்டுசேர்க்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் இன்றைய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்திகளை முழுமையாக விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துக்காக கொண்டுசேர்த்ததாகவும் குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கு உயிர்ப்பலிகள் நிறுத்தப்பட்டதாகவும் எரிக் சொல்ஹெய்க், அந்த சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ஷ தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் நோர்வே அரசுக்கும் நன்றியை வெளிபடுத்தியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
2010-ம் ஆண்டில் கடைசியாக ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில்,
நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு அங்கீகாரமாக,தன்னை மீண்டும் இலங்கை வந்து, அங்குள்ள சமாதானத்தை நேரடியாக உணரும்படி கேட்டுக்கொண்டதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேர்வேயின் அமைதி முயற்சி பங்களிப்புகளை விபரித்து அடுத்த ஆண்டு நூல் ஒன்று வெளியிடப்படும்போது, இந்தத் தகவல்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ள எரிக் சொல்ஹெய்ம், பிரிட்டிஷ் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான மார்க் சால்டர், தன்னுடனும் இலங்கையின் அமைதி முயற்சிகளில் பங்கெடுத்திருந்த நோர்வேயின் அக்கால துணை வெளியுறவு அமைச்சராக இருந்த விதார் ஹெல்கிஸனுடனும் சேர்ந்து அந்த நூலை எழுதுவதாகவும் கூறியுள்ளார்.
‘ஐநா விசாரணைக்கு தகவல் வழங்குவது கடமை’
இலங்கை மீதான ஐநா நிபுணர்களின் விசாரணை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் ஆரம்பித்துள்ள விசாரணைக்கு, இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப்புலிகளாலும் புரியப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை, இலங்கையராக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி, தங்களிடமிருக்கின்ற சரியான தகவல்களை, முழுமையான நேர்மையுடன் சமர்ப்பிக்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதையும் எரிக் சொல்ஹெய்ம் இன்றைய அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளார்.
ஐநாவின் தலைமைச் செயலாளராலும் ஏனைய ஐநா நிறுவனங்களாலும் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே, முன்னணி உலகளாவிய அமைப்பாக ஐநாவால் செயற்படமுடியும் என்றும் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் தனது அறிக்கையை முடித்துக் கொண்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எரிக் சொல்ஹெய்ம் ஜெனீவாவுக்குச் சென்று இலங்கை தொடர்பில் சாட்சியமளிக்க உள்ளதாகவும் குருநாகல் கூட்டத்தில் விமர்சித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.