இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் 7ஆவது ஜனாதிபதித் தேர்தல்
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியானது. பரப்பரப்பாக பேசப்பட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பிற்பகலில் இருந்த சுபநேரமான 1.18க்கு கைச்சாத்திட்டார்.
அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனத்தில் கைச்சாத்திடும்போது, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரி காமினி செனரத், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ ஆகியோரும் உடனிருந்தனர்.
மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்ற பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதையடுத்து அந்த பிரகடனம் தொலைநகல் ஊடாக தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி கைச்சாத்திடப்பட்ட செய்தி பரவியதையடுத்து நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதியை இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
1988ஆம் ஆண்டு 16ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானி வெளியான நாளிலிருந்து வேட்புமனுத்தாக்கல் 16 அல்லது 21 நாட்களுக்கு கோரப்படும் என்பதுடன் தேர்தல் 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்கு உட்பட்ட நாளொன்றில் நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது