இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2015இல்
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது குறித்த சந்தேகத்திற்கு விடைகிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி அரச அச்சகத்திற்கு ஜனாதிபதி கையொப்பமிட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது இரண்டாம் தவணைக்கான பதவிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையிலேயே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்இ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.
எதிர்வரம் ஜனவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி தேர்தல் நடாத்;துவதற்கான திகதியை நிர்ணயிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக வெளியாகியருந்தன. அதனை உறுதிசெய்யுமுகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முக்கியஸ்தராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க நேற்று (20.11.14) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இவற்றின் தொடர்ச்சியாக 28 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி வெளியில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
பொது எதிரணி வேட்பாளர்: இழுபறி நிலை
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தவணைக்கும் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எதிரணிக் கூட்டமைப்பின் முயற்சிகள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன. மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய பொது வேட்பாளராக களமிறக்கப்படக்கூடியவர்கள் என்று பல தலைவர்களின் பெயர்கள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித்த தேரர் உள்ளிட்டோரின் பெயர்கள் இதுதொடர்பில் பல தரப்பினராலும் பிரேரிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எதிரணியின் பக்கம் சாய்ந்து பொது வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. பிந்தி கிடைத்த செய்திகளின் படி மைத்திரிபால சிசேன பொதுவேட்பாளராக களம் இறங்கவிருப்பதாக தெரிகிறது. இவர் போட்டியிட்டால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வாங்குகள் பிளவுபடும் வாய்ப்யும் மகிந்த ராஜபக்ச தோல்வியடைய வாய்ப்பும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏதிரணி வேட்பாளர் நிச்சயமான பின்பே அடுத்தகட்ட நிலை பற்றி அறியமுடியும். இருப்பினும் நாட்டில் குடும்ப ஆட்சிக்கு பலத்த எதிர்ப்பு உண்டு அதே நேரம் சிறீலங்கா சுதந்திரக்கட்சியை காப்பாற்றும் முயற்சியில் சந்திரிக்காவும் அக்கட்சியின் முக்கியத்தர்களும் முயற்சிக்கின்றார்கள் என்பதும் தெரிகின்றது.