மனோ வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வு-
மனோ வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் அங்கோடை வைத்தியசாலையின் தமிழ் மக்கள் சிகிச்சைபெறும் பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் அமைப்பின் நோர்வே கிளை அமைப்பாளர் சிவராசா இராஜசிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் அங்கோடை வைத்தியசாலை அதிகாரிகளுள் ஒருவரான டொக்டர் ஹரிச்சந்திர கம்பீர மற்றும் தாதியர் குழுவினருக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் (19.11.2014) இடம்பெற்றது. இதன்போது அங்கு சிகிச்சைபெறுவோரின் அன்றாட பிரச்சினைகள், அவர்களின் வியாதிகள், மொழிப்பிரச்சினைகள், அவர்களுக்கான உதவிகள், அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகள், சிகிச்சை பெற்று வீடு திரும்பி அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியபின் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களது உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் பொருளாதார பிரச்சினைகள், போதைக்கு அடிமையானோரின் நிலைமைகள் என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் இவர்களுக்கான பொருளாதார சிக்கல்களுக்கு கிராம மட்டத்தினூடாக நடைமுறைக்கு சாத்தியமான வகையில் எவ்வாறு உதவவது, வைத்தியர்கள் தாமே முன்வந்து நோயாளர்களது இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சையளித்தலுக்கு எவ்வாறு உதவுதல் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை ஆற்றுப்படுத்தல், உறவினர்களுக்கு நோயின் தன்மை தொடர்பில் தெளிவுபடுத்தல் கிராம மட்டத்தில் அமைப்புகளின் ஊடாக அவர்களுக்கு உதவுவது தொடர்பிலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.