ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் விசேட சுற்றறிக்கை-
அரச மற்றும் அரச கூட்டுத்தாபன யாப்பு சபைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணையாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சு செயலர்கள், மாவட்ட செயலர்கள், திணைக்கள பிரதானிகள், அரச கூட்டுத்தாபன மற்றும் யாப்பு சபை தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச கார்கள், அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதுதவிர ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊழியர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நியமனம் வழங்குதல், பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் மட்டுப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் தனது சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பே ஜாதிக்க பெரமுன புறா சின்னம்-மைத்திரிபாலவின் டுவிட்டரில் தகவல்-
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் சட்டத்தை மீறும் அரச ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல்-
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறி நடக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைபடி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, 100 நாட்களில் எவ்வித யாப்பு திருத்தத்தையும் செய்ய முடியாதென நேற்றுமாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர சட்டத்தரணிகள் சங்க செயலர் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.
குழிக்குள் விழுந்து இரு குழந்தைகள் உயிரிழப்பு-
திருகோணமலை, சேருநுவர பகுதியில் நேற்றுக்காலை 8.30அளவில் குழியொன்றில் விழுந்து இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் தலைசிங்கம் சதுப்பியா (இரண்டரை வயது) மற்றும் தங்கேஸ்வரன் சாதனா (2வயது) ஆகிய இரு குழந்தைகளே உயிரிழந்துள்ளன. சேருநுவர, இறங்குதுறை, முகத்துவாரம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் குழந்தைகள், அவர்களது வீட்டுக்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்துள்ளனர். குழந்தைகளைக் காணவில்லை என பெற்றோர் தேடும்போது, அவ்விருவரும் குழியில் விழுந்; கிடந்துள்ளனர். உடனடியாக, குழந்தைகளை ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவில் பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் கைது-
வவுனியாவில் திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வவுனியாவில், 05 வீடுகளில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து மடிக்கணணி, கைத்தொலைப்பேசிகள் மற்றும் மோட்டார் சைக்கில் உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரை சேர்ந்த 41 வயதான கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு-
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகின்றது. 20 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையணிகளின் பிரதானிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கின்றார். இந்த மாநாடு நாளை மறுதினம் வரை நடைபெறுவுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பிரதானிகள் பங்கேற்கும் மாநாடு கொழும்பில் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
டயலொக் டிவியில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுக்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு-
சிரச சட்டண அரசியல் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பான சந்தர்ப்பத்தில், டயலொக் டிவியூடாக ஏற்பட்ட இடையூறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் சிலர் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பு டயலொக் நிறுவன பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாம் பணம் செலுத்தி பெற்றுக்கொண்ட சேவையை உரிய முறையில் வழங்குவதற்கு குறித்த நிறுவனம் தவறியுள்ளதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக வீதிக்கு மூன்று வயது-
தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் அதில் இடம்பெற்ற 12 வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக வீதியில் மொத்தம் 1227 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 409 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உலகத்தில் உள்ள ஏனைய அதிவேக வீதிகளுடன் ஒப்பிடுகையில் விபத்துக்கள் குறைவு என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
வவுனியா குட்செட் வீதி 1வது ஒழுங்கைக்குள் வீடுகள் கடைகள் மலசலகூடம் என்பவற்றிற்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு-
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தோணிக்கல் கிராமத்தின் குட்செட் வீதி முதலாவது ஒழுங்கைக்குள் உள்ள வீடுகள் கடைகள் மலசலகூடத்தினுள் மழை நீர் புகுந்து மக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச சபைக்கு மக்களினால் செலுத்தப்பட வேண்டிய ஆதன வரிகள்(சோலைவரி, வியாபாரஅனுமதிவரி) போன்றவற்றை மக்களிற்கு என்ன கஸ்ரம் என்றாலும் குறித்த காலஎல்லைக்குள் கட்டியாக வேண்டும் என்றும் தவறினால் பிரதேச சபை சட்டதிட்டங்களிற்குட்பட்ட நடுக்கண்டல் (அசையும் சொத்து, அசையா சொத்து பறிமுதல்) செய்யப்படுமென்று உடனுக்குடன் ;கடிதம்மூலம் அறிவித்தல் கொடுத்து அறவீடு செய்து வருகின்றனர். இது இவ்வாறு இருக்க அனாதரவான விதவையான 87 வயதுடைய மூதாட்டி கடந்த பல வருடங்களாக மழைகாலங்களில் வீட்டினுள்ளும் மலசலகூடத்தினுள்ளும் நீர் புகுந்து பாதிக்கப்படுவதை பிரதேச சபை நீர்வாகமுட்பட சம்மந்தப்பட்ட சகல அதிகாரிகளிற்கும் அவர்களது அலுவலகம் சென்று மனுகொடுத்து அறிவித்தும் எந்தப்பலனும் இற்i;றவரை கிடைக்காமல் இன்றும் பாதிப்பை சந்தித்துள்ளார். இதைவிட விதவைகளை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வீடுகளிற்குளுக்குள் ஆண் துணையுள்ள குடும்பத்தினர் மதில்களை உடைத்து அவர்கள் வளவுகளிற்குள் நீரை புகவிட்டு பாதிப்புற செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயல்வீட்டிலுள்ள உறவினர்கள்போல் பழகிவர்களும் சண்டைகளை பிடிக்கவேண்டியுள்ளது. இவைகளை சீர் செய்வதாயின் உரிய நிர்வாகத்தினர் சீரான வடிகாலமைப்பை சீர் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் வீடுகளிற்குள் நீர்புகுவதை தடுத்து நிறுத்தலாம் என கருதுவதுடன் வரிகளை மாத்திரம் அறவிடுவது மட்டுமல்ல மக்களிற்கு சேவை செய்யவும் பிரதேச சபை பயன்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.