இலங்கை மீனவர்களையும் விடுவிக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை-
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இதில் ஐந்து இந்திய மீனவர்கள் அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது இரு தரப்புக்களுக்கும் ஒரேவிதமாக நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானதென கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டடிக்காட்டியுள்ளார். குற்றச்செயலில் ஈடுபட்டதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தரப்பினருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஏனையவர்களை தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வரவு செலவுத் திட்ட விவாதங்களின்போதும் தாம் இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் 10 இல் வெளியாகும்-
பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதில் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கைச்சாத்திடுவர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் ஆட்சிமுறையை உருவாக்குதல், தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தல் என்பன உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் அமைச்சரவையையும், அமைச்சரவைக்குப் பொறுப்புக்கூறும் பிரதமரையும் உருவாக்குவதுடன், அமைச்சரவையின் பிரதானியாக பிரதமர் செயற்படுவார். இதனூடாக புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவுள்ளோம் என்றார்.
யோசனைக்கு ஆதரவளிப்போருடன் ஹெல உறுமய இணைவு-
தாங்கள் முன்வைத்துள்ள அவசர அரசியல் திருத்த பிரேரணைக்கு ஆதரவளிக்கின்ற தரப்பினருடன் இணைந்து செயற்படவிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கட்சியின் பிரதான செயலாளர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த யோசனைகளை முன்வைக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த யோசனைகளுக்கு பொது வேட்பாளர் வழங்குகின்ற பதில்களின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
எமது ஆட்சியில் யாரும் யுத்தக்குற்ற நீதிமன்றுக்கு செல்ல மாட்டார்கள்-மைத்திரிபால-
தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றால், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையோ, அவரது குடும்பத்தாரையோ அல்லது இராணுவ வீரர்களையோ யுத்தகுற்ற விசாரணை நீதிமன்றத்தில் நிறுத்த இடமளிக்கப் போவதில்லை என எதிகட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் கூறும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அல்லது, அவரது குடும்பத்தினர் அல்லது போரில் சம்பந்தப்பட்ட படைத்தரப்பினர் யாரையும் போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்படும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார். தமது அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பம் மற்றும் சகல பாதுகாப்பு கட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் தாம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் வழங்கவிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல்-
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று மீறியுள்ளார் என நீதிமன்றப் பிரகடனம் செய்ய வேண்டும். அத்துடன் இந்த மனுவின் தீர்ப்பு வரும் வரையில் ஜனவரியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கை மீதும் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது. பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தாமல் 18ஆவது திருத்தத்தை சட்டமாக்கதியதன் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். எனவே அவர் மூன்றாம் முறை ஜனாதிபதியாகும் தகுதியை மட்டுமல்லாது அவர் தற்போதைய ஜனாதிபதி பதவியாக இருக்கும் தகுதியையும் இழந்துள்ளார். ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுதாரர் கேட்டுள்ளார். மேலும், அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு பொருத்தமானவரை நீதிமன்றமே அறிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் மீண்டும் கைது-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அகதிகள் குழு ஒன்றை அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அவர்கள், இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு 23 தமிழர்கள், 13 சிங்களவர்கள் மற்றும் ஒரு பறங்கியர் அடங்கிய 37 பேர் கொண்ட அகதிகள் குழு, கடந்த முதலாம் திகதி தங்களின் பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தற்போது குற்றபுலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த முதலாம் திகதி குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளதாகவும் இதில் சிறுவர்கள் 6பேரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணம், சிலாபம், கொழும்பு மற்றும் மாரவில பகுதிகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சீன நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்தியா இலங்கையுடன் பேச்சு-
கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் மாநில வெளிவிவகார அமைச்சர் வை.கே.சின்ஹா இதனை நேற்றையதினம் இந்திய ராஜ்யசபாவில் வைத்து கூறியுள்ளார். குறித்த நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பில் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் தமது நாட்டில் இடம்பெறாது என்பதை இலங்கை இந்தியாவுக்கு உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் இன்னும் 24 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநில வெளிவிவகார அமைச்சர் வை.கே.சின்ஹா மேலும் கூறியுள்ளார்.
கூட்டமைப்புடன் இன்னமும் பேசவில்லை-எதிரணியின் பொது வேட்பாளர்-
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றுமுற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன், கட்டவுட், போஸ்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெறும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் நடைபெறும் இடங்களை அண்மித்த பகுதிகளில் எந்தவொரு பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாழைச்சேனையில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது-
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாழைச்சேனை இராணுவ முகாமின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் கையடக்க தொலைப்பேசியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 20, 34 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்-
ஜனாதிபதி தேர்தலுக்காக நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை கட்டுபணம் செலுத்தியுள்ளனர். மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச இதனை தெரிவித்துள்ளார். அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் என்ற அர்த்தத்தை கொண்ட ஒக்கோம வெசியோ ஒக்கோம ரஜவரு அமைப்பு, ஜனசெத முன்னணி, சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி ஆகிய அரசியல் கட்சிகளே இவ்வாறு கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ் கட்டளைத் தளபதியாக ஜகத் அல்விஸ் நியமனம்-
யாழ்ப்பாணத்துக்கான இராணுவ கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ தளபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்றுமுதல் தமது பொறுப்புகளை கையேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்துக்கான இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மஹிந்தவின் விளம்பரங்களை பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் அடங்கிய தேர்தல் விளம்பரங்களை பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, விளம்பரங்களுக்காக அரசாங்கத்தின் பணம் பெருந்தொகையில் செலவு செய்யப்படுகின்றது என்றும் கூறியுள்ளார். கொழும்பில் இன்றுமுற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் நாங்கள் கட்சி மாறுவது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கே தெரியாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நவீன் திஸாநாயக்க எதிரணியில் இணைவு, கூட்டமைப்பு உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நவீன் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சு பதவியை ராஜினாமா செய்வது மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை அம்பாறை, ஆலயடிவேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பி.தியாகராசா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் பதவி விலகல்-
அரசாங்கத்தின் தேசிய பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர், ஏ.எச்.எம். அஸ்வர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அவர் கையளித்துள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வரின் வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி நிமியக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.