சுழிபுரம் திருவடிநிலைக்கு புளொட்டின் நோர்வே அமைப்பாளர் விஜயம்-
யாழ். சுழிபுரம் திருவடிநிலைக்கு புளொட் அமைபபின் நோர்வே கிளை அமைப்பாளர் இராசசிங்கம் சிவராசா (ராஜன்) அவர்கள் நேற்று (27.11.2014) வியாழக்கிழமை விஜயம் செய்திருந்தார். இதன்போது அப்பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்துள்ள மீன்பிடி மற்றும் கூலித் தொழில்களை பிரதான தொழிலாகக் கொண்ட மக்களது நிலைகள் தொடர்பிலும் அவர்களின் மீளக்குடியமர்வின் பின் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட உதவிகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ் நிலையில் இப் பகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்தொழிலாளர் அமைப்பினர் தாம் சுதந்திரமாக தொழில் செய்ய முடியது உள்ள நிலைமை பற்றி அமைப்பாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதில் உள்ள இடர்நிலைகள் தொடர்பிலும் விளக்கினர். இவ் சந்திப்பின்போது அப் பகுதியில் நடைபெறும் வலி மேற்கு பிரதேச சபையால் மீளப் புனரமைக்கப்படும் வீதிகள் மற்றும் குடிநீர் திட்டங்களையும் புளொட் அமைப்பின் நோர்வே கிளையின் அமைப்பாளர் பார்வையிட்டுள்ளார்.
கல்விளான் காந்திஜி சனசமூக நிலையத்தில் குடிநீர் இணைப்பு பற்றிய கலந்துரயாடல்-
யாழ். சுழிபுரம் கல்விளான் காந்திஜி சனசமூக நிலையத்தில் கடந்த 26.11.2014 புதன்கிழமை அன்று மாலை 3மணியளவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் வேர்ள்ட் விஷன் நிறுவன உதவித்திட்டத்துடன் அப் பகுதி மக்களுக்கு வழங்கப்படவுள்ள வீட்டு அலகுகளிற்கான குடிநீர் இணைப்பு தொடர்பான மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் வேர்ள்ட் விஷன் மாவட்ட திட்டப் பணிப்பளர் அன்டனி மற்றும் வலி மேற்கு பகுதிக்குரிய இணைப்பாளர் அலக்ஸ் ஆகியோரும் பிரதேச சபையின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் ம.சிவநாதன் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் திரு.ச.புலேந்திரன் அப் பகுதி கிராம உத்தியோகஸ்தர் திரு தீசன் ,சமுர்த்தி உத்தியோகஸ்தர் திரு சுகந்தன் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் திட்டம் தொடர்பில் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறிப்பிடுகையில், இவ் திட்டம் நிறைவேறும் சந்தர்ப்பத்தில் இக் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படும் என்பதோடு இப் பகுதி மக்களது வாழ்க்கைத் தரத்திலும் மாற்றஙகள் ஏற்பட வழி ஏற்படும் என்றார். இவ் திட்டம் நிறைவேறவேண்டும் என்பது தனது மிக நீண்ட கால கனவு எனவும் அவர் குறிப்பிட்டார்
மன்னாரில் வெள்ளம் காரணமாக 1,428 குடும்பங்கள் இடம்பெயர்வு-
தொடர்ந்து பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 1,428 குடும்பங்கள் வரை இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி மன்னார் பிரதேச செயலக பிரிவில் 758 குடும்பங்களை சேர்ந்த 2903பேரும், நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 41 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 658 குடும்பங்களை சேர்ந்த 2714 பேரும் இடம்பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான சகல வெளிப் போக்குவரத்துக்களும் இன்றுகாலை 10மணியுடன் முடக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்து படகில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.