பத்திரிகை அறிக்கை
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் டொமினிக் அன்ரன் அவர்களை கட்சியிலிருந்து விலக்குவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது. அதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கையளிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்படும் என்ற ஒரு நிலைமை இருந்தபடியால் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி உட்பட இரண்டு பிரதேச சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வேட்புமனுவை திடீரென இரவோடிரவாக செய்யவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டதன் காரணத்தினால் வேட்பாளர்களை மக்கள் மத்தியில் சென்று சரியான முறையிலே தெரிவு செய்வதற்கு போதிய அவகாசம் இருக்கவில்லை. ஆகவே, எங்களுடைய கட்சி ஆதரவாளர்களையும், மற்றைய கட்சி ஆதரவாளர்களையும் கொண்டு அந்த வேட்புமனு பூர்த்தி செய்யப்பட்டது.
பின்பு அந்தப் பகுதி மக்கள் சார்பாக அதாவது, அந்தப் பகுதி மக்களைச் சேர்ந்த, மக்களால் மதிக்கப்படுகின்றவர்களைக் கொண்டு அந்தப் பதவிகள் பூர்த்திசெய்யப்படுமென்றும், எனவே அந்தப் பதவிகளிலே இருப்பவர்கள் இராஜினாமா செய்யவேண்டுமென்றும் வேட்புமனு கையளிக்கும்போதே அந்த தேர்தலிலே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கூறப்பட்டது. ஆயினும் அவர்கள் அதைச் செய்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த காரணத்தினால்தான் அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்கள்.
இதில் டொமினிக் அன்ரன் என்பவர் எங்களுடைய கட்சியின் ஒரு தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வந்தவர். எங்களுடைய கட்சிக்கும் அவருடைய செயற்பாடுகளுக்கும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய மறுத்த காலம்தொட்டு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்தது.
ஆகவே, அவருடைய செயற்பாடுகளுக்கும், எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதை மக்களுக்கு அறியத்தருகின்றாம்.
த.சித்தார்த்தன்,
தலைவர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
29.11.2014.