மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டி-

annam sinnathil pottiஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரால் தேர்தல்கள் செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கடும் மழையினால் முகாம் மக்களும் பாதிப்பு-

road_cook_02யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக வலிவடக்கு பகுதி மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் தீவகம், தென்மராட்சி, வடமராட்சி, பருத்தித்துறை, காக்கைதீவு, பொம்மைவெளி ஆகிய தாழ் நில பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 790 குடும்பங்களும் பாதிக்கப்படுள்ளன காக்கைதீவு, மாதகல் மேற்கு பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் இடம்பெயர்ந்து காக்கைதீவு கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க மைத்திரிபாலவுக்க ஆதரவு-

naveenநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச்செய்வதற்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் இடம்பெறும் பல்வேறு ஊழல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளோம். ஐ.தே.கட்சி தலைமைத்துவத்துடன் கடந்த காலங்களில் கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும், தற்போது அவற்றை நீக்கி, கட்சியை ஒன்றிணைக்கவுள்ளோம். பெருந்தோட்டத்துறை மக்களுக்காக ஒதுக்கப்படுகின்ற வளத்தைப் போன்று, நுவரெலியா மாவட்டத்தின் கிராமிய மக்களுக்கும் வளங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக கோரிவந்தும், எனது கோரிக்கை நிறைவேற்றப்படாமையே, அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்தேன் என அவர் கூறியுள்ளார்.

ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு-

kela maithஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்து வெளியேறியது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதி சந்திப்பு-

indian deefence advisorஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் சார்க் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கை உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மன்னாரில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்-

மன்னார் நகரில் வர்த்தகர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பண்டிகைக் காலத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வர்த்தகர்களுக்கு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு மன்னார் நகரசபை அனுமதி வழங்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார் நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் மன்னார் நகரில் பண்டிகைக் காலத்தில் வெளிமாவட்ட வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து வர்த்தகர்கள் மன்னார் நகர சபையிடம் மகஜர் ஒன்றையும் இதன்போது கையளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை-

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கையை விடு;த்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றிலிருந்து விலகி இருக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது இலங்கை தொடர்பிலான பயண எச்சரிக்கையின் பிந்திய தகவல் வெளியீட்டிலேயே இவ் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்போது தேர்தல் காலமாகையால், அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் தமது நாட்டவர்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.