சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு-

sarvadesa maatru thiranaalikal thinamசர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் இன்று விழிப்புணர்வு ஊர்வலங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளின் விழிப்புணர்வு ஊர்வலமொன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மகாத்மா காந்தி சதுக்கத்தில் ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் புனித மெதடிஸ் ஆலயத்தில் நிறைவுற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விழிப்புணர்வுப் பதாகைளை ஏந்திச் சென்றனர். இதேவேளை, வவுனியா மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்துகொண்ட ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபத்தில் நிறைவடைந்தது. அதனையடுத்து, நகர சபை மண்டபத்தில் மாற்றுதிறனாளிகள் கலை நிகழ்வுகளும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது. மேலும் யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவன ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. சுண்டுக்குளியில் அமைந்துள்ள யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத் தலைவர் ஜெ.கணேசமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குக் கைதடி அரச முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் தமது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல், பாடல் பட்டிமன்றங்களையும் மேடையேற்றினர். மேலும் இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் பயனாளி செ.சிவப்பிரகாசம் குறித்த நிறுவனத்தின் நிர்வாகச் செயலர் இ.இரத்தினசிங்கம் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வாக்காளர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

vaakkalarkalin adaiyaalam uruthiஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின்போது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்த கீழ்க்காணும் ஆவணங்களுள் ஒன்றை கட்டாயமாக சமர்ப்பித்தல் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார் இதன்படி வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் விநியோகிக்கப்பட்ட மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றையாவது சமர்ப்பித்தல் வேண்டும். எவ்வாறாயினும் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும் மேற்கூறியவற்றில் ஏதேனுமொரு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தேர்தல் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகின்ற விசேட அடையாள அட்டையை வழங்குவதற்கு கிராமசேவை அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன விசேட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள் வாக்கெடுப்புக்கு ஏழு நாட்கள் முன்னர் அதாவது எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அண்மையில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை நிறத்திலான அல்லது வர்ணத்தில் 2 சென்ரி மீற்றர் அகலத்தையும் 3சென்ரி மீற்றர் உயரத்தையும் கொண்ட மேலும் இரண்டு புகைப்படங்களை கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் இவ் அடையாள அட்டைகள் தேர்தல்கள் அலுவலகத்தின் பதவி நிலை அலுவலரின் ஒப்பந்தத்துடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

தேசிய சங்க சம்மேளனம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு-

thesiya sanga sammelanamஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தேசிய சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாட்டுக்கு புதிய யாப்பு அறிமுகப்படுத்தல் மற்றும் சட்டம், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்மேளனத்தின் செயலாளர் பாகியங்கல ஆனந்த தேரர் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும் மது அற்ற சமூகமொன்றை உருவாக்குவது தொடர்பில் சரியான வேலைத் திட்டம் தயாரிப்பது குறித்து மைத்திரிபாலவுடன் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு-

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. மண்மேடு சரிந்து விழுந்தமை மற்றும் ரயில் தடம்புரண்டமை ஆகியனவே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ல – ஹில்ஓய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஹட்டன் – கொடகல பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டுள்ளது. இதனால் இப் பாதையிலான போக்குவரத்து கொழும்பிலிருந்து ஹட்டன் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை-

mansarivu .நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களுக்கே தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானம்-

20 வருடங்களாக மூடப்பட்டிருந்த கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாளையதினம் முதல் குறித்த தொழிற்சாலையின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த தொழிற்சாலை மீளத் திறக்கப்படுவதால், கிழக்கு மாகணத்தில் சுமார் 25,000 விவசாயக் குடும்பங்கள் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய பொலிஸ் நிலையம்-

யாழ்ப்பாணத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கான புதிய பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. யாழ். பண்ணை விசேட அதிரடிப்படை முகாமிற்குள் அமையவுள்ள இந்தப் புதிய பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல்லினை யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி. விமலசேன இன்றைய தினம் நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். 5 மில்லியன் ரூபா செலவில் இந்தப் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

மூங்கிலாறில் ஆயுதங்கள் மீட்பு-

moonkilaaril aayuthankal meetpuமுல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு பகுதியில் துப்பாக்கிகள் இரண்டும், ரவைகளும், விமானத்தைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இரண்டும், மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் நேற்றையதினம் நடத்திய தேடுதலின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.