தேசிய விழாவில் வவுனியா அதிபருக்கு கௌரவம்-
இலங்கையின் மத்தியஸ்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உன்னதமான பணியை வரவேற்கும் பொருட்டு 2014 மார்கழி மாதம் 01ஆம் நாளன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற மத்தியஸ்தர்களை கௌரவிக்கும் தேசிய வைபவத்தின்போது வவுனியா மத்தியஸ்த சபை (262) தவிசாளர் திரு.சிதம்பரப்பிள்ளை வரதராஜா அவர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா சிதம்பரபுரம் சிறீ நாகராஜா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வருவதுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைமானிப் பட்டதாரியும், திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் டிப்ளோமாவும், அத்துடன் முதுகலைமானிப் பட்டதாரியுமாவார். இவர் முன்னாள் ஆசிகுள பதிவாளர் அமரர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் மகனுமாவார்.
யாழ் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்-
தமது விடுதலையை வலியுறுத்தி, யாழ். சிறையிலுள்ள 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கடந்த நவம்பர் 21 அன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 5ம் திகதி வரையிலும் ஐந்தாவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 விசைப்படகுகளுடன் தங்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த செவ்வாய்கிழமை மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். யாழிலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி மூர்த்தி சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கடந்த அக்டோபர் 27, 28 ஆகிய இரண்டு தினங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என யாழ்ப இந்திய துணைத்தூதரகம் அளித்த வாக்குறுதிகளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால், இம்முறை மீனவர்கள் தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
12 பேர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவளை கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது,
ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கை 85ம் இடம்-
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்தில் இலங்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்தப் பட்டியலில் 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது. மேலும் ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் அதிக ஊழல் இடம்பெறும் நாடுகளாக திகழ்கின்றன.
முன்னாள் புலி உறுப்பினர் கைது-
திருகோணமலை சம்பூர் பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 32 வயதான ஸ்கந்தராஜா என்பவரே கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைதாகியுள்ளார். அவரை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.