மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் 140 பிரதான கூட்டங்கள்-

pothu ethiraniyin udanpadikkai (2)எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பிரதான கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பிரதான கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுவேட்பாளரின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த 30ஆம் திகதி பொலனறுவையில் இடம்பெற்றது. இந்நிலையில், வடமத்திய மாகாணத்தை குறிவைத்து மகிந்த ராஜபக்சவின் முதலாவது பிரசாரக் கூட்டமும் எதிர்வரும் 11 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அஸ்வரது வெற்றிடத்திற்கு அமீர்அலியை நியமிக்க நடவடிக்கை-

பாராளுமன்றத்தில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வெற்றிடத்தை தமது உறுப்பினரைக் கொண்டு நிரப்ப அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளது. இதன்படி எதிர்வரும் வாரத்தில் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார். அமீர் அலிக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அந்த கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் ரிசாத் பதியூதின் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளிவராத நிலையில் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை, அமீர் அலியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அலிசாகிர் மவுலானா நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்புள்ளது.

தேர்தல் குறித்து 34 முறைப்பாடுகள் பதிவு-

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 34 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதில் 10 முறைப்பாடுகள் பாரதூரமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. துப்பாக்கிச்சூடு, அச்சுறுத்தல் மற்றும் சொத்து சேதம் ஏற்படுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மேலும் தேர்தலுடன் தொடர்புடைய சிறிய சம்பவங்கள் குறித்து 24 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் அதில் 4 சம்பவங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அரச சொத்துக்கள் பயன்பாடு, அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுதல், இடமாற்றம் வழங்கல் மற்றும் சட்டவிரோத போஸ்டர் கட்அவுட் போன்றவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என செயலகம் கூறியுள்ளது.

கண்காணிப்பு பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை-

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 35 சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. இதன்பொருட்டு தேர்தல்கள் ஆணையாளரின் சிபாரிசும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். இம்மாத இறுதிப் பகுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருந்து தேர்தலுக்கு முன்னரான மற்றும் பின்னரான செயற்பாடுகள் குறித்து கண்காணிப்புகளை முன்னெடுக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.மாவட்ட டி.ஐ.ஜிக்கு இடமாற்றம்-

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் இடமாற்றம் பெற்றுசெல்லவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 07ஆம் திகதி முதல் இரத்தினபுரி மற்றும் கோகலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக றொஹான் டயஸ் நியமனம் பெற்று செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்திற்கு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த வைத்திய அலங்கார எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடு நீர்த்தேக்கம் 2,750 மில்லியன் செலவில் நிர்மாணம்-

2750 மில்லியன் செலவில் இரணைமடு நீர்த்தேக்கம் மிகப் பெரியளவில் விரிவுபடுத்தப்பட்டு நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீர்மானம் எடுக்க முடியாமல் இழுபறிகளின் மத்தியில் இருந்த இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு மீளவும் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை இந்த வாரமளவில் ஆசிய அபிவிருத்தி வங்கியும், நீர்ப்பாசன அமைச்சும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சும், திறைசேரியும் இணைந்து முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. அத்துடன் கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியற்பீடம், விவசாயபீடம் ஆகியவைக்கு அண்மித்த பகுதியில் இந்த தொழில்நுட்பக் கல்லூரி 1000 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொடிகாமத்தில் கிளைமோர் மீட்பு-

யாழ். கொடிகாமம், இயற்றாலை பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து கிளைமோர் ஒன்று நேற்றையதினம் மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். மேற்படி காணி உரிமையாளர், தனது காணியை துப்பரவுபடுத்திக கொண்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரின் 522ஆவது படையணியின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் அவ்விடத்துக்கு சென்று கிளைமோரை மீட்டதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.