வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு-

vaakkalarkalin adaiyaalam uruthiஜனாதிபதி வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய அனைத்து வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியர் தம்மை இன்று சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். வேட்பாளர்களும் தேர்தல் ஆணையாளரும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். வேட்புமனுத் தாக்கல் செய்வது முதல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் விளக்கவுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு, வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய சட்ட விதிகள் பற்றி தேர்தல் ஆணையாளர் விளக்கமளிப்பார் என தேர்தல் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐ.தே.கட்சி முழுமையான ஆதரவு-

untitledபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடானது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என இதன் போது அனைத்து கட்சிகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மைத்திரிபாலவை பொது வேட்பாளராக ஆதரிப்பதற்கான யோசனையை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா சிங்கள மொழியில் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் க.வேலாயுதம் அதனை தமிழ் மொழியில் முன்மொழிந்தாh. இதனைத் அடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்த யோசனைக்கான கட்சியின் அனுமதியை கோரியிருந்தார். இதன்படி கட்சியின் ஏனைய உறுப்பினர், மைத்திரிபால சிறிசேனைவை பொதுவேட்பாளராக ஆதரிக்க அனுமதி வழங்கினர்.

பேர்த்தில் தங்கியிருந்த இலங்கை அகதி குடும்பம் நவுறுவுக்கு மாற்றம்-

imagesஅவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளின் குடும்பம் ஒன்று மீண்டும் நவுறு தீவிற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சென்ற இந்த குடும்பம் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குடும்ப உறுப்பினர் ஒருவரின் குழந்தை பிரசவத்துக்காக, அவர்கள் பேர்த் நகருக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீண்டும் நவுறு தீவுக்கே மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் மற்றும் 25குடும்பங்களைச் சேர்ந்த அகதிகளும் நவுறு தீவுக்கு மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.

தேர்தல் தொடர்பில் 46 முறைப்பாடுகள் பதிவு-

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 46 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அவற்றில், சிறு சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும், பாரதூரமான விடயங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம், அச்சுறுத்தல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற பாரதூரமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளில் அதிகமாக ஏழு முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கமபஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாப்பரசர் வருகையை முன்னிட்டு கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு-

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில் நோய்வாய்ப்பட்டவர்கள், நல்லொழுக்கமானவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் வழிகாட்டல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட உள்ளது. பாப்பரசரை கௌரவப்படுத்தும் நோக்கில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவ அதிகாரியை கைது செய்யுமாறு கோரிக்கை-

தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி, இராணுவ உயரதிகாரி ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவை போர்க் குற்றத்துக்காக கைதுசெய்யும்படி, அந்நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னாபிரிக்காவில் நடைபெறும் கிறிஸ்துவ இராணுவத்தினருக்கான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், 1990-களில் இலங்கை இராணுவ படைப்பிரிவு தளபதியாக இருந்தபோது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அவர்மீது தென்னாபிரிக்க வாழ் தமிழர்கள் கூட்டமைப்பு (எஸ்.ஏ.டி.எஃப்.) குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டுக் குற்றங்களுக்கான தென்னாபிரிக்க சிறப்புப் பிரிவிடம் ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளோம். இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் தென்னாபிரிக்க அரசு, சர்வதேச சட்டப்படி அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்.ஏ.டி.எஃப். அமைப்பு தெரிவித்துள்ளது.