வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கொழும்பில் பலத்த பாதுகாப்பு-

05ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை 8ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரை ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்பு மனுக்கள் நாளை ஏற்றுக்கொள்வதால் கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் செயலகமுள்ள ராஜகிரிய பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பாக அதேதினம் 9 மணிமுதல் 11.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிக்க முடியும். இதேவேளை ராஜகிரிய பிரதேசத்திலுள்ள கட்அவுட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பில் 52 முறைப்பாடுகள் பதிவு-

therthal nadavadikkaiku arasa valankalaiஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 52 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இவற்றுள் அதிகமான முறைப்பாடுகளாக ஏழு முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே பதிவாகியுள்ளன. மேலும் கண்டியில் நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று சிறுபான்மையினர் உட்பட 18பேர் கட்டுப்பணம் செலுத்தினர்-

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் மூன்று சிறுபான்மையின வேட்பாளர்கள் உட்பட 18 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 16 கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களுமே இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நவசமசமாஜக்கட்சி சார்பில் மகேந்திரன், ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் இப்ராஹிம் நிஸ்தார் மொஹமட் மிஹ்லார் மற்றும் சுயேட்சையாக முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.இல்யாஸ் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள சிறுபான்மையின வேட்பாளர்களாவர்.

முல்லேரியா பிரதேசசபை தலைவர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

mulleria pradeshiya saba thalaivarகோடிகாவத்தை – முல்லேரியா பிரதேசசபை தலைவர் பிரசன்ன சோலங்கஆராச்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட சில விடயங்களால் தான் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கப் போவதாக கூறிய அவர், ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பரந்தன், ஆரையம்பதி விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு-

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு 8.30அளவில் மோட்டார் சைக்கிளொன்றை இலக்கத்தகடு அற்ற வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இலக்கதகடற்ற வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். நொச்சியாகமவைச் சேர்ந்த இளைஞரே இதன்போது பலியானதுடன், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ளது. கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். இதேவேளை மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இ.போ.ச பஸ் நேற்றுமாலை மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி-

vellaththaal pathikapatta makkalukkumயாழ் மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த அடை மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தினால் இவ்வாறு அவசரகால உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் தரப்பால், பாய், பால் மா வகைகள், போர்வைகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் ஒருவார காலத்திற்கு வழங்கப்பட்டன. பௌதீக ரீதியான அனர்த்த தணிப்பு செயற்பாடுகள் அனர்த்த மத்திய நிலையத்தால் இராணுவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு நிலைமைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க யாழ் மாவட்ட செயலகம் தாயாராகவுள்ளது எனவும் அரச அதிபர் கூறியுள்ளார்.