கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்-

imagesCAQRB1O0கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 4,279 நிலையங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 3,70,739 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2,06,481 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர் இதேவேளை, பரீட்சை நிலையங்கள் மற்றும் இணைப்பு நிலையங்களுக்குள் அனுமதியற்ற எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதையும், ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராவய பத்திரிகை பிரதம ஆசிரியர்மீது சீ.ஐ.டி விசாரணை-

ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.டபிள்யூ ஜனரஞ்சன சீஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று குறித்த விசாரணை நடத்தப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதியிட்ட ராவய பத்திரிகை நடத்திய பொதுமக்கள் கருத்துக்கணிப்பு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த தினத்தில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போவது மஹிந்த ராஜபக்சவா? மைத்திரி சிறிசேனவா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதில் மகிந்த ராஜபக்சவுக்கு 41 வீத வாக்குகளும், மைத்திரிக்கு 59 வீத வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிப்பிடப்பட்டிருந்தது

சோமரத்ன திஸாநாயக்க, ஹிருணிகா பிரேமச்சந்திர மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

somaratne-dissanayake_CIHirunika_CIஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவரும், பிரபல சிங்கள திரைப்பட இயக்குனருமான சோமரத்ன திஸாநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று முற்பகல் ஊடகத்தனரிடம் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு இரு தடவைகள் தாம் ஆதரவு வழங்கியதாகவும் எனினும் கலைத்துறையை முன்னேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுக்கவில்லை என்பதுடன், தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகவும் சோமரத்ன திஸாநாயக்க கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். முன்னாள் அரசியல்வாதி பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர முல்லேரியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக அரசியலுக்கு வந்த ஹிருணிகா கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தேர்தலுக்கு முன் தேசிய அடையாள அட்டை-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவங்களுக்கு விரைவில் அடையாள அட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சரத்குமார தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

பல்கலை விரிவுரையாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு-

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்து விரிவுரையாளர் சங்கம் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தமது செயற்பாடுகளில் அத்துமீறல்களை மேற்கொள்வதாக விரிவரையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த நிலையில் விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக இன்று பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன.

16 வேட்பாளர்கள் சொத்து விபரங்கள் ஒப்படைப்பு-

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 19 பேரில் 16 பேர் இதுவரையில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினமான நேற்றையதினம் 16 பேர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏனையவர்களுக்கும் அடுத்த சில தினங்களில் இந்த விபரங்களை ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.