இரு இலங்கை மலையக தமிழ்க் கட்சிகள் எதிரணியில் இணைகின்றன

diga-rada_CIஎதிரணியில் இணைந்த திகாம்பரம் இலங்கையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான இரு மலையக அரசியல் கட்சிகள் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளே அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளன.. மலையக மக்கள் முன்னனியின் அரசியல் பிரிவு தலைவரான வீ. இராதகிருஷ்னன் தான் வகித்து வந்த தாவரவியல் மற்றும் பொது பொழுது போக்கு துணை அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். மற்றுமோர் அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான பி. திகாம்பரமும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் பதவிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தமது பதவி விலகல் கடிதங்களை குறித்த இருவரும் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டு வீ. இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். இ.தொ. கா தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து இரு வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய அவர் மலையக மக்கள் முன்னணியில் இணைந்திருந்தார். அதே தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று பி. திகாம்பரமும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த போதிலும் பின்னர் அவர் அரசாங்க தரப்பில் இணைந்து கொண்டார். இந்த இருவரும் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இடம் பெற்றிருந்த அவருடனான சந்திப்புகளில் இணக்கம் தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்காவிடம் முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்படும் – மைத்திரி

Maithraiதாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியில் சந்திரிக்காவை அமர்த்தப் போவதாகவும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் கொள்கைகளுக்கும் மட்டுமே கட்டுப்பட போவதாகவும் எவரும் தம்மை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கணனி மோசடிகள் இடம்பெறவில்லை எனவும், தேர்தல் ஆணையாளர் மீது பூரண நம்பிக்கை இருப்பதாகவும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவினால் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளும் என்ற அச்சம் கிடையாது. நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியும் எனவும். படையினர் மீது பூரண நம்பிக்கை இருப்பதாகவும் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.