ஜாதிக ஹெல உறுமயவின் துணை பொது செயலாளரான உதய கமன்பில ராஜபக்ஷவுக்கு ஆதரவு

Chambicஜாதிக ஹெல உறுமயவின் துணை பொது செயலாளரான உதய கமன்பில ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகுவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முடிவு மிகவும் கவலையுடன் எடுக்கப்பட்ட ஒன்றாகும். கட்சி ஆரம்பிக்கப்பட்டு 15 வருட காலமாக விசுவாசமாக இருந்த எனக்கு மைத்திரிபால வெற்றி பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுக்க வேண்டி ஏற்பட்டது. நான் கட்சியை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் அதைவிடவும் தாய் நாட்டை நேசிக்கின்றேன். ஹெல உறுமயவுக்கு எனக் கொள்கைகள் உள்ளன. நாங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் சில திருத்தங்களையே செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். ஆனால், பொது எதிரணி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 100 நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கைச்சாத்திட்டார். இதேவேளை, அங்கு 3 மணித்தியாலங்களின் பின்னர் ஹெல உறுமயவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முறையில் திருத்தங்களை செய்வதாக கைச்சாத்திட்டார். இவர் யாரை ஏமாற்றப்பபோகிறார்? ஐ.தே.கவையா? அல்லது ஹெல உறுமயவையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  தேர்தல் முடிந்து இவர்கள் எவ்வாறு ஸ்திரமான அரசை நிறுவப்போகிறார்கள். இவர்களால் 100 நாட்களில் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் போலி நாடகமே. தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் நாடு துண்டு துண்டாக சிதறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாங்கள் முதலில் அரசிலிருந்து வெளியேறி, பௌத்த அமைப்புகள் ஒன்றினைந்து 3 ஆவது ஜனாதிபதி வேட்பாளரை தேர்தலில் நிறுத்தவே தீர்மானித்தோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. எனினும், எனக்கு பொது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பதில் எந்தவித உடன்பாடும் இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடம் ஏறினால் நாட்டில் மக்கள் ஆட்சி இல்லாமல் போய் தமிழீழம் உருவாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளது. ஏனெனில் இந்த எதிர்க் கட்சிக் கூட்டணியில் இருப்பவர்கள் மேற்குலக நாடுகளின் முகவர்கள். இதனால் தற்போதுள்ள அரசை பாதுகாக்க வேண்டியது இலங்கையர் என்ற வகையில் எனது பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர வெளிநாடுக்கு சென்றுள்ளார்.

Hirunika_CIமேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த, முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி, ‘எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்துகொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வார்’ என தெரிவித்தார்.

அத்துருகிரியவில் விமான விபத்து நால்வர் மரணம்  

auuuஇன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ரஷ்ஷியாவின் தயாரிப்பான அன்ரனொவ் -32 என்ற வகையை சேர்ந்த விமானம் கட்டுநாயக்கவிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் தொடர்பை தாம் இழந்ததாகவும் அத்துரகிரியவில் இறப்பர் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும். இந்த இறப்பர் தோட்டத்தில் நான்கு வீடுகள் அமைந்துள்ள நிலையில், ஒரு வீட்டின் கூரை இதன்போது சேதமடைந்துள்ளது.  இதன்போது நான்கு பேர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ள  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காட்சித் தெளிவின்மை இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாமென்று சிவில் விமான போக்குவரத்துச்சபை தெரிவித்துள்ளது.

 மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அது சர்வதேசத்தின் வெற்றி

Mahinda-Maithri-03‘எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அது அவருக்கான அல்லது நாட்டுக்கான வெற்றியாக அமையாது. அது சர்வதேசத்;தின் வெற்றியாகவே அமையும்’. ‘யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் அழித்து துடைத்தெறிந்த ஜனாதிபதியை சர்வதேசம் இன்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்கு முட்பட்டு வருகின்றது. நாடு அபிவிருத்தி பாதையில் செல்லும் இத்தருணத்தில் பல சதிமுயற்சிகளும் நாட்டை சர்வதேசத்துக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன’ விவசாயிகளுக்கான வரட்சி நிவாரண காசோலைகளை வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் வியாழக்கிழமை(11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.- ‘நாட்டிலே சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் இல்லாமலில்லை. பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தோன்றியது அல்ல. ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலத்திலும்; பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. இவ்வாறான பிரச்சினைகள் தோன்றும்போது நாங்கள் ஆளும் கட்சி என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருந்ததில்லை. கிழக்கு மாகாண சபையில் நாடு,நகர சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வந்தபோது அது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுகூறி அன்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட நாங்கள் வன்மையாக கண்டித்தோம்.  யுத்தத்தை முடித்த கையோடு நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும்  இரவோடு இரவாக தீர்த்துவிட முடியாது. எல்லா இனங்களிலும் இனவாதம் பேசுபவர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி, பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை என்பதற்காக எதிரணிக்கு செல்வது, சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகும்.  எதிரணியிலுள்ளவர்களின் பின்புலங்களையும் அவர்களது அரசியல் பின்னணிகளையும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் உற்று நோக்க வேண்டும். அம்பாறை கரையோர மாவட்டம் வழங்கப்படுமா?, மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமா?, வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படுமா?, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கான பாதுகாப்பு, காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா? என்பதனை எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் கூறமுடியுமா? என்று கேள்வி கேட்கிறேன். இவ்விடயங்கள் தொடர்பில் வாய்திறக்கக் கூடாதென்று அங்குள்ள இனவாதக் கட்சிகள் தடைபோட்டுள்ளன. சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய துணிவும், தைரியமும், சந்தர்ப்பமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது. எனவே, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சிறுபான்மை சமூகத்தினர் தட்டிக்கழித்துவிடக்கூடாது. குறிப்பாக விவசாயிகள் இந்த அரசாங்கத்தை மறந்துவிட மாட்டார்கள். விவசாயத்துறைக்கு எந்தவொரு அரசாங்கமும் செய்திராத பல நன்மைகளை துணிச்சலுடன் எமது ஜனாதிபதி செய்துள்ளார். கடந்தகால யுத்தத்தின் போது கைவிடப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகள் இன்று மீட்டெடுக்கப்பட்டு அதில் எமது ஏழை விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தைப் பெற்று வருகின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.