1இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை முன்வைக்கக்கூடிய வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பானது ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பும்வரை இதற்காக காத்திருக்கின்றோம் என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமது பரப்புரைகளின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான கருத்துக்களை கூறவில்லை. மாறாக, எதிர்மறையான கருத்துக்களையே தெரவித்து வருகின்றனர். சிங்கள பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு எதிர்மறையான கருத்துக்களை இருபெரும் வேட்பாளர்களும் தெரிவித்து வருவதாகவே தெரிகின்றது. இவ்வாறான கருத்துக்களைக் கேட்டு சிங்கள மக்கள் வாக்குகளை வழங்குகின்றபோது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சிங்கள பெரும்பான்மையின மக்கள் ஆதரவு வழங்காத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எதிர்மறையான கருத்துக்களை கேட்கும் சிங்கள மக்கள் தீர்வுக்கு இணங்கமாட்டார்கள். கடந்தகாலங்களில் இத்தகைய அனுபவங்களை நாம் பெற்றுள்ளோம். இந்த நிலையில் தீர்க்கமாக ஆராய்ந்தே தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவு எடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும், அவர்களது நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கக் கூடியவருக்கே கூட்டமைப்பு ஆதரவை வழங்க முடியும். திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்கும் வகையிலும், மீள் குடியேற்றத்தினை மேற்கொள்ளும் வகையிலும், செயற்படக் கூடியவருக்கே ஆதரவு அளிக்க முடியும். இத்தகைய பிரச்சினைக்கான தீர்வினை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பவருக்கே ஆதரவு வழங்கும் சூழல் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பியதும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் ஒன்றுக்கு கூட்டமைப்பு வரும் என்று தெரிவித்தார்.