பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் 80 மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் பலி-

defaultபாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 மாணவர்கள் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படுகிறது. பெஷாவரில் இராணுவப் பாடசாலையில் மாணவர்களை சிறைப்பிடித்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இராணுவ உடையுடன் நுழைந்த தெஹ்ரி-இ-தலிபான் இயக்கத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். சீருடை அணிந்த 6 அல்லது 7 தீவிரவாதிகள் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் உள்ளே துப்பாக்கிச்சூட்டு சத்தம் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் மற்றும் கய்பர் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிட்னி சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறை விசாரணை-

aus-hotel-03அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் பொது மக்களை பணய கைதியாக வைத்திருந்த சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறையின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று காலை முதல் 16 மணி நேரம் பொதுமக்களை பணய கைதியாக வைத்திருந்த ஈரானிய தீவிரவாதி குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சிட்னி நகரத்தில் இடம்பெற்ற சம்பவம் பயங்கரவாதம் தொடர்பில் அவுஸ்ரேலியாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளதாக ஆஸி பிரதமர் டோனி அபோர்ட் தெரிவித்துள்ளார். 16 மணி நேரத்திற்கும் அதிகமாக பணய கைதியாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு மீட்டனர். இதன்போது ஈரானிய அகதியான ஹெரோன் மொனிஸ் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் பலியாகினர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் டோனி அபோர்ட், இதனை வார்த்தையில் வர்ணிக்க முடியாது என்றார். சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிவ் சவுத்வேல்ஸில் தேசியகொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள இரண்டு பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் மேலும் இருவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பாலசிறிசேனவுக்கு ஆதரவளிக்கபோவதாக அறிவித்துள்ளனர். அத்தனகல பிரதேச சபையின் உறுப்பினர் இந்திக்க ராஜபக்ஷ மற்றும் மீரிகம பிரதேச சபையின் உறுப்பினர் சோமரத்ன ஜெயநீத்தி ஆகியோரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசுடனான முஸ்லிம் காங்கிரசின் பேச்சு இணக்கமின்றி நிறைவு-

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஆளுங் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருகின்றது. இதன்பொருட்டு நேற்று சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இன்றும் சந்திப்பு இடம்பெற்றபோதிலும் அது இணக்கமின்றி நிறைவுக்கு வந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்குகளை 30ஆம் திகதியும் அளிக்க முடியும்-

எதிர்வரும் 23, 24ஆம் திகதிகள் தபால்மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்காக வேறொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. அவ்வாறான வேட்பாளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்க முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய தினம் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வேறொரு தினம் வழங்கப்படாதென அவர் கூறியுள்ளார்.