newsயாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஆரம்பமானது. இன்று இடம்பெற்ற மேற்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், இதன்போது ஏற்பட்ட கலவரத்தினால் சிலர் காயமடைந்ததுடன், கூட்டமும் பின்போடப்பட்டது..

மேற்படி அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முதலில் உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள், தேர்தல் காலத்திலே நடைபெறுகின்ற இவ்வாறான கூட்டங்களிலே அரசியல் ரீதியாக அதாவது, ஒரு கட்சியை விமர்சித்தோ அல்லது ஒரு கட்சிக்கு சார்பாகவோ பேச வேண்டாமென்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார் என்று கூறினார். பின்பு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள், இப்போது இருக்கின்ற கட்டுப்பாடுகள் காரணமாக நான் அதிகம் பேசவில்லை. மிகச் சுருக்கமாக இதைச் சொல்லிவிட்டு எனது பேச்சை நிறுத்துகின்றேன். அதாவது, மாகாண சபையை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகள் உள்ளன. அவை தளர்த்தப்பட வேண்டும். அரசியல் மாற்றங்கள் வருமா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றுகூறி தனதுரையை நிறைவு செய்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாகாண சபை தெரிவு செய்யப்பட்டதையும், கூட்டமைப்பு மக்களை உசுப்பேற்றியே தேர்தலில் பெரும்பான்மையாக வென்றது என்றும் தெரிவித்ததுடன், கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதையும் செலவுசெய்யாது பெருமளவு நிதி திரும்பிச் செல்கின்ற ஒரு நிலைமை இருக்கிறது என்றும் கூறினார். அத்தோடு நீங்கள் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) மாகாண சபையை நேர்மையாக நடத்துறதுக்காக கொண்டுவரவில்லை. அதைக் குழப்புவதற்காகத்தான் அதை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் மாகாண சபையையும் மிகவும் காட்டமாக தாக்கிப் பேசினார். 

இதன்போது பல தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து அதற்குப் பதிலளிக்க முற்பட்டபோது, ஒரு குழப்பகரமான நிலைமை உருவானது. அதாவது, அவர்களை பேசவிட மாட்டேன் என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இப்போது பேச அனுமதி தரமுடியாது. நான் பேசியபின் நீங்கள் பேசுங்கள் என்று கூறினார். இதன்போது ஒரு குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்வின் இணைத்தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கூட்டமைப்பினரைக் கட்டுப்படுத்தினார். இருந்தபோதிலும் தொடர்ந்தும் குழப்பகரமான நிலைமையே காணப்பட்டது. வாதப்பிரதிவாதங்களும், ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டும் இருந்தார்கள்.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள், ஒலிவாங்கியை எடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முற்பட்டுக் கொண்டிருந்தபோது உடனடியாக அந்த ஒலிவாங்கியை பிடுங்குவதற்காக ஈ.பி.டி.பியைச் சார்ந்தவர்கள் முயற்சித்தபோது அதில் ஏற்பட்ட கலவரம் தொடர்ந்து தண்ணீர் போத்தல்களால் எறிந்து, கைகலப்பாக மாறி, கையில் அகப்பட்டவற்றால் எறிகின்ற நிலைமைகள் உருவானபோது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் சர்வேஸ்வரன், விந்தன் கனகரட்ணம், சிவயோகன் ஆகியோர்க்கு காயமேற்பட்டதாக வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கூறியிருக்கின்றார்.

அதேவேளை தமது தரப்பில் ஐவருக்குக் காயமேற்பட்டதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியிருக்கின்றார். இதன்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ராஜ்குமார், வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐவரே ஈபிடிபி தரப்பில் காயமடைந்ததக கூறப்படுகிறது. இந்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த அங்கத்தவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேற கூட்டம் பின்போடப்பட்டது.

jaffna0jaffna1jaffna3jaffna4jaffna5