28ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 28ஆம் திகதியை பிகரடனப்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 20ஆம் திகதி தபாலில் சேர்க்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவிக்கின்றார் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக வாக்களார் அட்டைகள் தபாலில் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் தபால் திணைக்களத்தினால் 25 மாவட்டங்களிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. வாக்காளர் அட்டை விநியோகம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்த திகதியின் பின்னர் தபால் திணைக்களத்தினால் வீடுவீடாக வாக்காளர் அட்டை விநியோகம் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும்கட்சி கூட்டத்தில் குழப்பம் விளைவிப்பு, ஐவர் காயம்-

இரத்னபுரி எஹலியகொட பகுதி ஹோட்டல் ஒன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் கூட்டம் ஒன்றில் நுழைந்த ஐ.தே.கட்சியின் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் சிறிபால கிரிஎல மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. இதன்போது இரு குழுக்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மோதலால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட, சிறிபால கிரிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பெண்களும் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கெபே அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய உதவியாளர்களுடன் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குறித்த கூட்டம் தேர்தல் சட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தேசிய தொழிற்சங்க ஒன்றியம் மைத்திரிக்கு ஆதரவு, நிட்டம்புவவில் கிளைமோர் மீட்பு-

ஜனாதிபதித் தேர்தலில் 50ற்கும் மேற்பட்ட தேசிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்குவதுடன், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ பிரதேசத்திலிருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிட்டம்புவ பிரNதேச சுடுகாடு ஒன்றிலிருந்து 10 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

காணாமற்போனோர் தொடர்பில் வவுனியாவில் சாட்சிப் பதிவுகள் நிறைவு-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பகிரங்க சாட்சிப் பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. கடந்த 14ஆம் திகதி முதல் செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு நாட்களாக சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன. ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக நேற்று 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், 33 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்ததாகவும், அவர்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று புதிதாக 118 பேரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார். இதன் பிரகாரம் கடந்த நான்கு நாட்களாக வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளில் மொத்தம் 169 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 331 பேரிடமிருந்து ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

மகேஷ் மடவல மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி மகேஷ் மடவல எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேNவுளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளையதினம் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 100 நாட்களுக்கான வேலைத்திட்டம், குறித்த விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி தொடர்பில் மைத்திரிபால கேள்வி-

2010ம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச பொருட்களை வீணடித்து சர்வாதிகார ஊழல் மிக்க ஆட்சியை ஆரம்பித்ததாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியால் நாட்டில் நல்லாட்சி நடப்பதாக கூறுகின்றார்கள், ஆனால் தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவின்றி வீதிகளில் கட்டவுட்களை வைப்பது நல்லாட்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று எல்பிடியவில் இடம்பெற்ற மக்கள் பேரணியின்போதே மைத்திரிபால இதனைக் கூறியுள்ளார். சிறுவர் குற்றங்கள், பெண்கள் துஷ்பிரயோகம், தாக்குதல்கள், நாளுக்கு நாள் நடக்கின்றன. இவை நல்லாட்சி, ஜனநாயகமா என அவர் கேள்வி எழுப்பியதுடன், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தொடர்பில் ஜனவரி மாத ஆரம்பத்தில் விவாதிக்க வருமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீரியபெத்த மக்களின் குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-

பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 75 குடியிருப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் இன்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் அங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இவ் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – பூனாகலை – மல்லவவத்த பகுதியிலேயே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக எதிரணியினர் ஆர்ப்பாட்டம்-

தேர்தல் சட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் சட்டங்களை முறையாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் எதிரணியினர், தேர்தல்கள் செயலகத்துக்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக்கட்சி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிவில் அமைப்புகள் இணைந்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லையென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இருவர் காயம்-

கிளிநொச்சி, கரடிப்போக்கு ரயில் கடவையில் கெப் வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றுமாலை இடம்பெற்றதாக கிளிநொச்சி ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். ரயில் கடவையில் பாதுகாப்பு மணி ஒலிக்கச் செய்யப்பட்ட போதிலும், கெப் வாகனம் ரயில் கடவையைத் தாண்டி பயணிக்க முற்பட்டபோது ரயில் எஞ்சினுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், கரடிப்போக்கு ரயில் கடவை பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாகவும், அந்த இடத்தில் ரயில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான காணி மீள் ஒப்படைப்பு-

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை, கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான காணி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டிலிருந்து இந்த காணி இராணுவத்தின் தேவை கருதி நிர்வகிக்கப்பட்டு வந்ததாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 80 பேர்ச் காணி இராணுவத்தின் 22 ஆவது படையணியால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காணியை மீள ஒப்படைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றிருந்தது.

மைத்திரிபால வகித்த பதவி திஸ்ஸ அத்தநாயக்க பொறுப்பேற்பு-

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று சுகாதார அமைச்சராக பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இன்றுகாலை சுகாதார அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 8ம் திகதி இணைந்துகொண்டார். முன்னதாக சுகாதார அமைச்சர் பதவியை வகித்து வந்த மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எதிரணி பொது வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் 3500 இடங்கள்-

நாட்டில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என சந்தேகிக்கப்படும் 3500 இடங்கள் வரை பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இடங்கள் பற்றி மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவ்வாறான இடங்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணைத்து இடங்கள் தொடர்பிலும் பரிசோதனை செய்ய தேவையான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எம்.எஸ்.பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.