இன்றும் நாளையும் அஞ்சல் மூல வாக்களிப்பு-
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும் நாளையும் நடத்தப்படுகின்றது. அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமது வாக்காளர் தொகுதியிலிருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பிரதேசத்தில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக மேற்படி இரு தினங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படுகின்றது. இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக பலர் விண்ணப்பித்திருந்தபோது பல்வேறு காரணங்களுக்காக சில விண்ணப்பங்கள் தேர்தல்கள் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டனர். அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும் அரச அலுவலகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வாக்காளர்கள் அடையாளமிடும் சின்னம் பிறர் அறியாத வகையில் இரகசியமாக பேணப்படுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும் நாளையும் வாக்களிக்க தவறியவர்கள் 30ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 26ஆம் திகதியன்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு 30 ஆம் திகதியன்றும் அஞ்சல்மூல வாக்களிப்பு நடத்தப்படும்.
ராகலையில் மண்சரிவு அபாயம், 60 குடும்பங்கள் இடம்பெயர்வு-
மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா – ராகலை தியனில்ல பகுதி 60 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கன மழை காரணமாக தியனில்ல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் இவர்களை தோட்ட கோவில்களில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு நிலம் வெடித்து மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்ததோடு அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க தீர்மானம் எடுத்த போதும் அந்த தீர்மானம் இன்று வரை நடைபெறாததால் மக்கள் இவ்வாறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த 60 குடும்பங்களை சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு, மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது – கபீர் ஹசிம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வெளியிட்ட உடன்படிக்கை தொடர்பான ஆவணம் போலியானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒரு உடன்படிக்கையை தயாரித்து அதனை இரகசிய உடன்படிக்கை என கூறுவதாக கபீர் ஹசிம் கூறியுள்ளார். இதேவேளை அரசாங்கம் போலியான ஆவணத்தை தயாரித்துள்ளதாகவும் அதில் உள்ள கையெழுத்தும் போலியானதெனவும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு-
அரச சேவையாளர்கள் மற்றும் அரச வளங்களை தேர்தல் செயற்பாடுகளுக்கான பயன்பாடுத்தப்படுவது தொடர்பில் ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. தேர்தல் ஆணையாளருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அரச உடமைகள் பாவனை கட்டுப்பாடின்றி பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.