வெள்ளத்தால் சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு-
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்டங்களிலும் 12,855 குடும்பங்களைச் சேர்ந்த 46,746 பேர் 205 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட்சத்து 4 ஆயிரத்து 609 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 96 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 276 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் 88,925 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7ஆயிரத்து 794 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 608 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 997 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 969 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 361 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 224 குடும் பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 884 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தில் ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த ஆறு ஆயிரத்து 608 பேரும், மத்திய மாகாணத்தில் 227 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும், வட மேல் மாகாணத்தில் ஆயிரத்து 615 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 672 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்குக் காரணமாக நாடு முழுவதிலும் 1914 வீடுகள் முழு அளவில் சேதமடைந்திருப்பதுடன், 6,561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 1879 வீடுகள் முற்றாகவும், 5578 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பெருக்குக் காரணமாக பல பகுதிகளுக்கான வீதிப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளுக்கான இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.