ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பத்துவருட பூர்த்தி-

aaliசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிவடைந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன. காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகர் காணாமற் போயினர். இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகினர். சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, நாடளாவிய ரீதியில் மத வழிபாட்டுத் தலங்களில் விசேட பிரார்த்தனைகளும், காலை 9.25முதல் 9.27வரையிலான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 10ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு-

சீரற்ற காலநிலை காரணமாக போவதென்ன நீர்தேக்கத்தின் சகல அவசர கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. நீர்தேக்கத்தின் ஆறு அவசர கதவுகளும் ஆறு அடி வீதம் திறக்கப்பட்டதாக அதற்கான பொறுப்பான பொறியிலாளர் எச்.எம்.எல்.ஆர் ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, அம்பன்கஹ, எலஹெர மற்றும் பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் தாழ் நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மவுசாகலை நீர்தேக்கத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக அவசர கதவுகளை திறக்க நேரிட்டுள்ளது. இதன்காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடையக் கூடும் என மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கிதுல்கல, ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களின் தாழ் நிலங்கள் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன தெரிவிக்கின்றார். 73 நீர்த்தேக்கங்களில் 58 நீர்த்தேங்கங்கள் வான் பாய்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் காணப்பட்ட இந்நிலையானது தற்போது ஹம்பாந்தோட்டை மொனராகலை மாவட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், அநுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பலநீர்த் தேக்கங்கள் வான் பாய்ந்துள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன தெரிவித்துள்ளார். மேலும், தெதுறுஓயா, கலா ஓயா, மல்வத்து ஓயா, மீ ஓயா மற்றும் மகாவலி கங்கை உள்ளிட்ட பல ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகாஸ்தென்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

100 கோடி ரூபா கொடுத்தாலும் அரசுடன் இணைய மாட்டேன் – திகாம்பரம்-

தான் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். பரவிவரும் இந்த செய்தி குறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், மலையக மக்களே என் உயிர். அதனால் மலையக மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசாங்கத்தில் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டேன். 100 கோடி ரூபா பணத்தை கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டு வரச் சொன்னாலும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள மாட்டேன். மலையக மக்களின் தனிவீடு காணி உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். தோல்வி பயத்தில் சிலர் நான் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வதந்தியை பரப்புகின்றனர். ஆனால் நான் தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன் என்றார்.

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, மலையக ரயில் சேவைகள் இரத்து-

malyagamநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் மல்லவபிட்டி, ரிதிகம, மாவத்தகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல, கட்டுவன பிரதேச செயலாளர் பிரிவிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மலையக மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றுகாலை கொழும்பில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளநிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டும் உள்ளன.

பதுளை, மண்சரிவில் புதையுண்டு அறுவர் உயிரிழப்பு-

koslanda_image_007பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிலர் காணாமற்போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

ரூ.2,500 மில்லியன் நட்டஈடு கோரி திஸ்ஸவுக்கு மைத்திரி நோட்டீஸ்-

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார். இந்த போலி ஒப்பந்ததத்தை தயாரித்து வெளியிட்டதன் ஊடாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறியே, மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கைப் பத்திரத்தை அனுப்பி வைத்துள்ளார்.