தேர்தல் தொடர்பில் 400 முறைப்பாடுகள் பதிவு-பவ்ரல்-
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 400க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல்கள் செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 113 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவற்றில் அதிகமாக கண்டி பொலிஸ் பிரிவில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் 11 முறைப்பாடுகளும், கொழும்பு தெற்கில் 10 முறைப்பாடுகளும், அனுராதபுரத்தில் 9 முறைப்பாடுகளும், நுகேகொடையில் 8 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை-மைத்திரிபால-
தாம் உருவாக்கும் புதிய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெலிகம பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். வடக்கில் இராணுவத்தை அகற்ற நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவவீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எமது புதிய அரசாங்கத்தில் யுத்த வெற்றியை எதிர்கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நாம் பலப்படுத்துவோம். இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
தேர்தல் சட்ட திட்டங்கள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு-
அரசாங்கம் நாளுக்கு நாள் தேர்தல் சட்ட திட்டங்களை மீறுவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்;. நாட்டில் உள்ள காவற்துறையினரிடம் தனிப்பட்ட ரீதியாக கேட்டாலும், அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறுகின்றமை குறித்து நன்றாக கூறுவார்கள். நான் செல்லவிருந்த கூட்டம் ஒன்றின் மேடைமீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. இதுதான் அரசாங்கத்தின் நல்லெண்ணம். இலங்கை வரலாற்றில், தேர்தல் இடம்பெறும் காலகட்டத்தில் அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் இவ்வாறான தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.க மாகாண சபை உறுப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு-
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சித்திரா மன்திலக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்து தனது தீர்மானத்தை சித்ரா மன்திலக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தாம் செயற்படுவதாக அவர் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார். சித்திரா மன்திலக்க ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட, பாத்ததும்பர தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டு வந்தார்.
நிஷாந்தவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி-
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வந்துரம்ப பகுதியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் மேடையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில், நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்யுமாறு அண்மையில் பத்தேகம நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் அவர் தற்போது வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறுகையில், நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை எதிர்பார்த்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாழ். அல்வாய்ப் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு-
யாழ். அல்வாய் பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து ஆணிணொருவரின்; சடலம் இன்றுகாலை மீட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே இடத்தை சேர்ந்த குடும்பஸ்தரான செல்லையா மகாலிங்கம் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்து-
மலையக மார்க்கத்தில் இன்றுகாலை வேளையில் சேவையிலீடுபடவிருந்த அனைத்து ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது. கொழும்பு – மட்டக்களப்பு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பொலன்னறுவையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிக மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக ரயில் போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதம கட்டுப்பாட்டாளர் டி.வீ.குணபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் மலையகத்துக்கான ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு-
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்கிற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதியின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க கூறுகையில், இப்படியான ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் திணைக்களம் மூலம் அனுப்பப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது கடந்த சில வாரங்களாகவே இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதை நாம் அவதானித்துள்ளோம். அந்த கடிதங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் படங்களுடன், கடந்த 10 வருடங்களாக செய்த சாதனைகள் குறித்தும் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது. அவை தேர்தல் விதிகளுக்கு முரணானவை. அவை வெறுமனே வருடாந்தம் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் சாதாரண வாழ்த்து துண்டுப் பிரசுரங்கள் என்று இராணுவம் கூறுவதை நிராகரிக்கிறோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் நாமும் பவ்ரல் அமைப்பும் முறைப்பாடு செய்திருந்தோம். அவரும் இவை வெறுமனே வாழ்த்துச் செய்திகள் அல்ல என்பதை புரிந்துகொண்டார். அந்த கடிதங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துமாறு தபால்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார் என ஷான் வீரதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (பிபிசி)