ஜனாதிபதிமீது வழக்கு தாக்கல் செய்யும் வகையில் யாப்பு திருத்தப்படும்-மைத்திரிபால-
நாட்டின் ஜனாதிபதிமீது வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்பில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை நடத்திச் சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பண்டாரநாயக்க கொள்கை இல்லாதொழிக்கப்பட்டது. அரசாங்க ஊழியர்கள் சுயமாக இயங்க முடியவில்லை. சாதாரண மக்களை மறந்து செயற்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்காக பெற்றோல், டீசல் விலையை குறைத்தார். ஆனால் அப்பாவி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டம் இல்லை. இன்று விவசாயிகள் நீரிழிவு நோயாளர்களாக மாறியுள்ளனர். விதை விலை அதிகம். களஞ்சியசாலை வசதி இல்லை. நீர்முகாமைத்துவம் இல்லை. உர பிரச்சினை உள்ளது. உற்பத்திகளுக்கு உரிய விலை இல்லை. ஜனவரி 8ம் திகதிக்குப் பின் அமையும் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நடிகர் சல்மான்கான் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். கொழும்பு பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ_ம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இன்றுகாலை இலங்கையை வந்தடைந்திருந்தனர். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவருமாக மொத்தமாக ஆறுபேர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்து கொண்டு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பைஸர் முஸ்தபா மைத்திரிபால சந்திப்பு, தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானமில்லை–
சிங்கபூரிலிருந்து இன்று அதிகாலை நாடுதிரும்பிய முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அவர் மைத்திரிபாலவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதியமைச்சர் முஸ்தபா, கடந்த 26ஆம் திகதி சிங்கபூருக்கு பயணமாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை நாடு திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனவரி 8ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு இதுவரையிலும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்குமாறு யாரும் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார.
நிஷாந்த முத்துஹெட்டிகம கடும் நிபந்தனை பிணையில் விடுதலை-
சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகமவை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல பத்தேகம நீதவான் சந்தன எதிரிமான்ன இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்பிரகாரம், பத்தேகம பிரதேசத்துக்குட்பட்ட 8 பொலிஸ் பிரிவுகளுக்குள் நுழைவதற்கு பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பத்தேகம, வந்துரம்ப, யக்கமுல்ல, உடுகம, நெலுவ, ஹினிதும, நாகொடை மற்றும் போத்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குள் முத்துஹெட்டிகம நுழைய முடியாது. அத்துடன், அவருடைய கடவுச் சீட்டையும் நீதிமன்றம் பொறுப்பெடுத்துள்ளது. தலா 5 லட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கிய நீதவான், பொதுமக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தொடர்பில் முழு உலகமும் அவதானமாக இருப்பதால் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தார். இதேவேளை, முத்துஹெட்டிகமவின் சாரதியான மெத்சிறி சாமிந்தவையும் ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பத்தேகம நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறி இருந்த நிஸாந்த நேற்று மீண்டும் நாடு திரும்பிய போது கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபாலவின் காரியாலயம் மீது துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்-
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், மஹியங்கனை காரியாலயம்மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஹியங்களை நிதஹாங்கல சோரபொர எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வானில் நேற்றிரவு வந்த 15பேர் கொண்ட குழுவினரே தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோகத்தையும் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதலினால் மூவர் காயமடைந்துள்ளனர் என மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. காரியாலயத்தில் இருந்த அங்கவீனமான முன்னாள் இராணுவ கேர்ணல் மற்றும் இன்னும் இருவரே காயமடைந்துள்ளனர். முன்னாள் கேர்ணல், மஹியங்கனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உள்ளுர் கலைஞர்கள் மீது தாக்குதல்-
ஏமாற்றத்திலிருந்து மீள்வோம்’ எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம் நடித்துகொண்டிருந்த உள்ளுர் இளம் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குருணாகல், கும்புகெடே எனுமிடத்தில் வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கலைஞர் சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார். நீல நிறத்திலான ஆடையை அணிந்திருந்த ஆண், பெண்கள் அடங்களாக சுமார் 30பேர் அடங்கிய குழுவினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தூசனங்களால் ஏசியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மண்சரிவு, மேலும் இரு சடலங்கள் மீட்பு- வெள்ள அனர்த்தம், குழந்தை உயிரிழப்பு-
பதுளை – ரில்பொல – சுபோதாகம பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போயிருந்தவர்களில் மேலும் இருவரது சடலங்கள் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளன. இந்த அனர்ததத்தில் சிக்கியவர்களின் 18 பேரது சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்து முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை திருகோணமலை, கிண்ணியா, கச்சக்கொடித்தீவு பிரதேசத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று வெள்ளத்தில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தரான பளீல் முகம்மது றயிஸ் என்பவரின் குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது. குழந்தை, விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வீட்டு முற்றத்தில் தேங்கியிருந்த வெள்ளத்தில் விழுந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்டு, கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிண்ணியா, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளவத்தை பஸ் விபத்தில் 10 பேர் காயம்-
கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எல்பிட்டியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்றே வீதியை விட்டு விலகி, பாதுகாப்பு வேலியில் மோதுண்டு இன்றுகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது பஸ்ஸின் முன்ஆசனத்தில் அமர்ந்திருந்த எட்டுவயதான சிறுமி பஸ்ஸ_க்குள் சிக்கினார். இதனையடுத்து அவரை, கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் பிரிவினர் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.