அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்!2015

ஈர் பதினைந்தாண்டுகள் அரசியல் போராட்டம்

ஈர் பதினைந்தாண்டுகள் ஆயதப் போராட்டம்

முடிவற்று ஜந்து வருடங்கள் கடந்தாயிற்று

முடிவில்லா நிலையில் இரண்டாயிரத்து பதினைந்து

இவ் ஆண்டிலாவது முடியட்டும் எமது வேதனைகள்

இது வரை அனுபவித்த சோதனைகள் போதும்

புரையோடிப்போன பிரச்சனை தீரும் இவ் ஆண்டிலாவது – என்ற

புது நம்பிக்கையுடன் வரவேற்போம் இப் புதிய ஆண்டை

எமது மக்களோடும் மண்ணோடும் வாழும்
த.ம.வி.க (P.L.O.T.E)
ஜ.ம.வி.மு (D.P.L.F)

„ஓன்றாய் நாம் இல்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை’ அமரர் தோழர் உமாமகேசுவரன்

 

சமுக அபிவிருத்தியை ஏற்படுத்துவேன்-மைத்ரிபால சிறிசேன-

தமது ஆட்சியில் தெளிவான சமுக அபிவிருத்தியை மேற்கொள்ளவிருப்பதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்தளம், ஆனைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைக்கவிருப்பதகாவும், எந்த ஒரு நாட்டிலும் ஜனாதிபதியின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையில், விவசாய மக்களின் நிலைமைகளை நான் நன்கு அறிந்திருக்கின்றேன். நாட்டில் தற்போது தேசியத்திற்கு இடமில்லை. இன்று மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு என்றால் இலங்கை தேசிய உற்பத்திக்கு என்ன நிலமை என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நந்தமித்ர ஏக்கநாயக்க மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், நீண்டகால மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தமித்ர ஏக்கநாயக்க எதிரணியில் இன்று இணைந்து கொண்டுள்ளார். பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிரணியினருக்கு தனது ஆதரவினை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எனக்கும் இடையில் கருத்து மோதல்கள் எதுவும் கிடையாது. அதேவேளை எதிரணியில் இணைந்து கொள்ளுமாறு எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவுமில்லை. எனது சுயவிருப்பின் பேரிலேயே அரசில் இருந்து வெளியேறினேன் என அவர் கூறியுள்ளார்

ஆனைமடு நகரில் மைத்திரியின் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்-

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆனமடுவ நகர தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆனைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆனமடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படகுமூலம் தமிழகம் சென்ற யாழ். இளைஞன் கைது-

லங்கையிலிருந்து தமிழகத்தின் தனுஸ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய க்யூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளனர். தனுஸ்கோடி பகுதியில் இலங்கை அகதி ஒருவர் வந்திருப்பதாக க்யூ பிரிவு பொலிசாருக்கு அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞனை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மணிகண்டன் எனவும் தந்தையிடம் படகுக்கு 50ஆயிரம் ரூபாய் வாங்கிகொண்டு யாழிலிருந்து நள்ளிரவு 2மணிக்கு புறப்பட்டு சபரிமலை செல்வதற்கு வந்ததாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு-

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் அலுவலகத்திலே இன்றைய தினம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குமார் குணரத்னம் நாடு திரும்பினார்-

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பின் குமார் குணரத்னம் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் குமார் குணரத்னத்திற்கு இலங்கைவர தடை இருந்த நிலையில் இன்று அதிகாலை 12.15 அளவில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் தொடக்க நிகழ்விற்காக இலங்கை வந்திருந்த குமார் குணரத்னம், கடத்தி அச்சுறுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் பேஸ்புக் குறித்து 2250 முறைப்பாடுகள் பதிவு-

2014ம் ஆண்டில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் 2250 முறைப்பாடுகள் பதிவானதாக இலங்கை கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளின் பின் பல போலி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த வருடத்தில் இணையம் தொடர்பில் 70 முறைப்பாடுகள் பதிவானதாக அவர் கூறினார். மின்னஞ்சல் மூலம் நிதி மோசடி செய்வது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.