காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவை ஆரம்பம்-

kaankesanயாழ். காங்கேசன்துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்துள்ளனர். அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இவர்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளனர். 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதியுடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இறுதியாக ரயில் சேவை இடம்பெற்று பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் ரயில் சேவை அஸ்தமித்திருந்தது. மீண்டும் 24 வருடங்களில் பின்னர் ரயில் சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோழர் சுந்தரம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம்-

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச.சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 33வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்திரா அச்சகத்தில் ~~புதியபாதை~~ பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

பழிவாங்கும் அரசியல் எம்மிடமில்லை : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா-

untitledபழிவாங்கும் அரசியல் தம்மிடமில்லை எனவும், ராஜபக்ச குடும்பத்தினரே வைராக்கிய அரசியலை முன்னெடுப்பதாகவும் சாடியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே தாம் முனைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாத்த்தளை மாவட்ட எம்.பியும் பிரதியமைச்சருமான நந்திமித்ர ஏக்கநாயக்க எதிரணியுடன் இணைந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு அவரது இல்லத்தில் நடைபெற்றநிலையில் அங்கு உரையாற்றும்போதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு உரையாற்றியுள்ளார். எம்மிடம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கல் இருந்ததில்லை. நாம் அவ்வாறு செயற்படப் போவதுமில்லை. எனது ஆட்சிக்காலத்தல் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய நான் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட எதிரணி பொது வேட்பாளருடன் இணைந்து கொண்டார். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் ஆதரவளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜே.வி.பியின் எம்.பியாக 2004ம் அண்டு முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், பின்னர் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினராக செயற்பட்டு வந்தார். 2010 பொதுத் தேர்தலில் அச்சல ஜாகொட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். சிறிதுகாலம் அவர் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகவும் இருந்தார். பின்னர் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.

புத்திரசிகாமணி, பீ.பி. லக்சரு மைத்திரிபாலவுக்கு ஆதரவு-

aikkiya thesiya katshiமுன்னாள் பிரதி அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான வீ.புத்திரசிகாமணியும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக இன்று அறிவித்துள்ளார். அத்துடன் ஹிரியால மற்றும் குருனாகலை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் 3பேரும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். மற்றும் அம்பலாங்கொட பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் பீ.பி.லக்சரு எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். காலி பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற அவர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் வெளியிட்டுள்ளார். அம்பலாங்கொட பிரதேச சபைக்கு சுயேட்சை குழு மூலம் தெரிவான அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கி வந்தார்.

பல்கலைக்கழகம் செல்வோரிடம் கட்டணம் அறவிடுவதில்லை-மைத்திரிபால-

Maithripala-Sirisena3பல்கலைக்கழகம் செல்லும் எவரிடமும் கட்டண அறவீடுகளை தாம் மேற்கொள்ளப்போவதில்லை என எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் இது தொடர்பில் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதையை நிலைமையின்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிகணனிக்கு அவர்கள் கல்வியை முடித்த பின்னர் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. இது தமது ஆட்சியின் போது முழுமையாக அகற்றப்படும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் தமது 49 வருடகால அரசியல் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டையும் பார்த்துள்ளதாகவும், தற்போது ஏற்பட்டுள்ளதை போன்று, அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ள தேர்தலை தாம் பார்த்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் வீட்டின்மீது தாக்குதல்-

UNP amaipalar veeduஐக்கிய தேசியக் கட்சியின் பெலியத்த தொகுதி அமைப்பாளர் விமல் ஜயசிறியின் பெலியத்த – கஹவத்த வீட்டின்மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 15 மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் வீட்டின்மீது தாக்குதல் நடத்தியதுடன் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம், ஆவணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் விமல் ஜயசிறியின் மனைவி பிரியங்கா கருணாதிலகவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய குழு துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. பெலியத்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அலைபேசியூடான தேர்தல் பிரசாரத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள்-

vaakkalarkalin adaiyaalam uruthiசந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48மணிநேரத்துக்கு முன்னளர் செய்யப்படும் இவ்வாறான பிரசாரங்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.