கிழக்கில் நான்கு வீடுகளின் மீது கைக்குண்டுத் தாக்குதல்-
மட்டக்களப்பு, காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனவை ஆதரித்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின்மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் என்பவரின் வீட்டின்மீதும் காத்தான்குடி அல்.அமீன் வீதியில் அமைந்துள்ள எம். பஷீர் என்வரின் வீட்டின்மீதுமே மேற்படி கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டின் முன் இருந்த கதிரைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு-
குருநாகல் பகுதியில் அமைந்துள்ள, வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேடருவவின் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதில் காயமடைந்த குறித்த வீட்டின் காவலாளி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த லக்ஷ்மன் வேடருவ அண்மையில் அதிலிருந்து விலகி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு-
புலிகள் அமைப்பிற்கு எதிரான தடையை தமிழக அரசாங்கம் நீடித்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை தலைமை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னாள் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் வேனில் பொருத்தப்பட்டிருந்த குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. இவற்றை புலிகளே மேற்கொண்டதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் கடந்த வருடம் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினம் என்பவை தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் அனுஸ்டிக்கப்பட்டிருந்தன. இவ் விடயங்கள் புலிகள் அமைப்பு தமிழகத்தில் தொடர்ந்தும் இயங்குகின்றது என்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, புலிகள் மீதான தடையும் நீடிக்கப்படுகின்றது என ஜிதேந்திரநாத் ஸ்வைன் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS
யாழ். நாவாந்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்-
யாழ். நாவாந்துறையில் நேற்றிரவு இரு இளைஞர் குழுக்கள் மோதிக்கொண்டதால் பதற்றநிலை ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே நேற்று அடிதடியாக உருவெடுத்தாக கூறப்படுகிறது. நேற்றிரவு 7 மணியளவில் ஒரு குழுவினர், தேவாலயம் ஒன்றுக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே மோதல் உருவெடுத்துள்ளது. அவர்கள் தேவாலயத்துக்கு முன்பாக இருந்த கடைகளின் கண்ணாடிகளை உடைத்ததாகவும், அதன் பின்னர் இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது. மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதல் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து பொலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதேவேளை மோதலை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் அதே இடத்தைச் சேர்ந்தவரான சந்திரகுமார் சஞ்ஜீவன் (வயது 30) என்பவரே காயமடைந்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரது பாதுகாப்பு வாபஸ்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரது பொலிஸ் பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான எம். இராஜேஸ்வரன் மற்றும் ரீ.கலையரசன் ஆகிய இருவரது பொலிஸ் பாதுகாப்பே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 11பேரில் 8பேர் மட்டுமே மாகாண சபை உறுப்பினர்களுக்குரிய பொலிஸ் பாதுகாப்பை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்குரிய பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களது பாதுகாப்பு மட்டும் விலக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கல்முனை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரியிடம் தான் வினவியபோது, மேலிட உத்தரவு என தனக்கு பதில் தரப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினரான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களது பாதுகாப்பும் மீளப் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள் இருவரது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி கர்ப்பிணி உட்பட மூவர் உயிரிழப்பு-
திருகோணமலை, கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்திலிருந்து கப்பல்துறைக்கு படகில் சென்ற 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கச்சான் அறுவடைக்காக இன்றுஅதிகாலை 5மணியளவில் சென்றுக்கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 6 மாத கர்ப்பிணியான அஷ்மா (வயது 17) உவைஸ் தனூஷ் (வயது 12) மற்றும் கடாபி முனிஷா (வயது 7) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றைய நால்வருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இந்திய அரசின் நிதியுதவியில் 2014ல் 27ஆயிரம் வீடுகள் நிர்மாணம்-
இந்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2014ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக இந்தியத் துணைத்தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 555 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 447 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக வடக்கில் 162 நிர்மாணிக்கப்பட்டும் உள்ளன. வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு 30 பில்லியன் இலங்கை ரூபாவை இந்தியா ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த ஆண்டில் 19 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவும், 7ஆயிரம் வீடுகள் புனரமைக்கப்படவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது,
மைத்திரிபாலவின் கூட்டத்தில் கல்வீச்சுத் தாக்குதல், மாகாணசபை உறுப்பினர் ஆதரவு-
பல்மடுல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றத் தொடங்கியபோது மேடை மீதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்விதமிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார். மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜி.சமரநாயக்கவே இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.