ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொது நோக்குடனேயே ஒன்றிணைவு-
தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளும், பொது இலக்குடனேயே ஒன்றிணைந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரலகங்கவிலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ{டனும் தாம் இரகசிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறான எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. புதிதாக ஏற்படுத்திக் கொள்வதாகவும் இல்லை. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொது இலக்குடன் அனைத்து தரப்பும் ஒன்றிணைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகளில் ஈடுபடுவோரை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்-வாசுதேவ-
வன்முறைகளில் ஈடுபடும் யாரையும் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தி கூறியுள்ளார். அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அடாவடி செயற்பாடுகள் கொண்ட பொதுபல சேனா அமைப்பினரே காரணம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு தமிழ், முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறான ஒரு அமைப்பு ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததையடுத்து, அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருந்த அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் முற்றாக சிதைந்து போயுள்ளது. மேலும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கும், வன்முறைகளில் ஈடுபடும் யாரையும் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தி கூறியுள்ளார்.
நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா வீட்டின்மீது குண்டுத் தாக்குதல்-
மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சாவின் வீட்டின்மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதனால் அவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். பெற்றோலினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டே வீசப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேற்படி சல்மா ஹம்சா கர்தான்குடி நகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக இருப்பதுடன், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவிருந்து பெண் செயற்பாட்டாளராகவும் மனிதநேய செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை நேற்று அதிகாலை காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூகின் வீட்டு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு கைக்குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்களை வாக்களிக்குமாறு கேட்க முடியாது-மாகாண சபை உறுப்பினர் அனந்தி-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தமைக்காக, தான் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின்போது, பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக மைத்திரி இருந்துள்ளார். அப்போது, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழ் மக்களை கொல்லும்போது எந்த கருத்துக்களையும் கூறவில்லை. அந்த அடிப்படையில், மக்களிடம் சென்று இவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது. அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சரத் பொன்சேகா தோல்வியடைந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்த செயற்பாட்டினை நான் முற்றாக நிராகரிப்பதுடன், இந்த தேர்தலிற்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்க முடியாது என்று மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு-
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12மணியுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில் எதிர்வரும் 6ம் திகதியுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களும் நீக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக விநியோகிக்கும் விசேட தினமாக இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 90சதவீதமான வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். இன்றும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், 08ம் திகதிக்கு முன்னதாக தங்களின் பிரதேச அஞ்சல் நிலையங்களுக்கு சென்று பெறமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட அதிரப்படையினர் களமிறங்கல்-
அரலகங்வில பகுதியில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர் அரலகங்வில மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று 5 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் பிரசார கூட்டம் நிறைவுபெற்ற பின்னர், குறித்த இடத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டமை குறித்து தமக்கு இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரலகங்வில பகுதியை அண்மித்து, சிறு அளவிலான மேலும் நான்கு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மைத்திரிக்கு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு, ஆரிப் சம்சுதீனும் ஆதரவு-
சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரன் தமது ஆதரவு அறிவித்தலை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து பொது எதிரணியுடன் இணைந்துகொண்டுள்ளார். பொலன்னறுவை தம்பாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் தனது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.
ஒரு இலட்சத்து 75,000 பேர் தேர்தல் கடமைகளில்-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் அரச அதிகாரிகள் ஒரு இலட்சத்து 75,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார். வாக்களிப்பு நடைபெறவுள்ள தேர்தல் மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள மத்திய நிலையங்கள் போன்றவற்றில் சேவையில் இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தாபல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கு 95 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உதவித் தபால் மா அதிபர் கூறியுள்ளார்.