Header image alt text

thampasitti libraryவடமராட்சி தம்பசிட்டியில் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தேர்தல் விளக்கவுரை-

யாழ். வடமராட்சி தம்பசிட்டி தசாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அப் பிரதேச இளைஞர்கள் மத்தியில் தேர்தல் விளக்கவுரை ஆற்றியுள்ளார். இன்றுமாலை முதல் இந்த சந்திப்புகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பிரதேசத்திலும் வேறு இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக மக்கைளை சந்தித்து நிகழ்கால அரசியல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

எந்தவொரு தரப்புடனும் இரகசிய ஒப்பந்தம் இல்லை-மைத்திரிபால-

maithriநாங்கள் எவருடனும் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த காலங்களில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய மோசடிகளைச் செய்தது. அவை அனைத்தையும் நாம் பொறுத்துக்கொண்டோம். எமது வெற்றி உறுதி. நாம் எமது விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே பலர் எம்முடன் இணைந்துகொண்டனர். நாம் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில்இடம்பெற்ற விசேட கூட்டமொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டை பிளக்கவும் புலிகள் மீண்டும் தலைதூக்கவும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் மூன்று நாட்களில் கடுமையான தேர்தல் வன்முறைகளில் ஈடுபட ஆளுந்தரப்பு முயற்சித்து வருகின்றது. நாம் சமாதானமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்கிறோம். பாரிய வெற்றியுடன் நாம் புதிய யுகத்தைப் படைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

காவத்தை துப்பாக்கிச்சூடு தொடர்பில் நால்வர் இனங்காணப்பட்டனர்-

ethirani vedpalaruku atharavu sooduஇரத்தினபுரி கஹாவத்தை நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கஹாவத்தையில் இன்று பொதுக்கூட்டம் இடம்பெறவிருந்தது இந்நிலையில், இதற்கான ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பொலன்னறுவையில் நேற்றையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பங்குகொண்டு திரும்பிய மூன்று பேரூந்துகள்மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் காவல்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

94 வீதமான வாக்காளர் அட்டைகளே விநியோகம்-தேர்தல் திணைக்களம்-

therthal nadavadikkaiku arasa valankalaiஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை 94 வீதம் நிறைவுபெற்றுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 6 வீதமானவற்றை விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் காலஅவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளளது. வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி உரிய தபாலகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1185 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 142 முறைப்பாடுகள் வன்முறைகளுடன் தொடர்புபட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 1043 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.

கட்சித் தாவல் வெறும் வதந்தியே-சஜித்- கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவல்-

இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமளவுக்கு எனக்கு பைத்தியம் இல்லை. இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்பவர்கள், எங்களுக்கு சேறுபூசவே முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டிய தேவையும் எனக்கில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளப்போகிறார் என்ற வதந்தி பரவியுள்ள நிலையிலேயே அவர் அதற்கு பதிலளித்துள்ளார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளனர். நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சிக்கு கட்சி தாவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்-

திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள ஆளுந்தரப்பு அலுவலகமொன்றுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த வீடியோக் காட்சிகளை தடுத்து நிறுத்த முயன்ற உதவித் தேர்தல் பொறுப்பதிகாரியை பிளாஸ்டிக் கதிரையொன்றால் தாக்கிய சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தங்களது தேர்தல் பிரசார அலுவலகத்துக்குள் நுழைந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள், அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைகளை பலவந்தமாக எடுத்துச் சென்றனர் என பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாரவூர்தி மீது துப்பாக்கி சூடு-

புத்தளம் ஆண்டிகம கிரியன்னல்லிய பாதையில் காவல்துறையின் நிறுத்தல் சமிஞ்சை பொருட்படுத்தாது சென்ற பாரவூர்தி மீது நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பாரவூர்தியின் ஓட்டுநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த பாரவூர்தி சோதனை செய்யப்பட்ட போது அதிலிருந்து மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பல்லம காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பில் பாரவூர்தி ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ஒரு வகை நச்சு விதையை உண்டமை காரணமாக குறித்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.