பிரசார நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றச்சாட்டு-
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கென இன்று முதல் 65 ஆயிரம் காவல்துறையினர் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 13 ஆயிரம் பணியாளர்கள் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்றும் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே தேர்தல்கள் தொடர்பில் தமது அமைப்பிற்கு ஆயிரத்து 358 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவிக்கின்றது.
நள்ளிரவிற்கு முன் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தல்-
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்துள்ளார். அதேபோன்று, அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் இன்று அகற்றப்பட வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினத்திற்குள் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கும் தவறும் கட்சி அலுவலகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்துள்ளார்.
வாக்குபெட்டி பஸ்களின் பின்னால் செல்ல வேட்பாளர்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி-
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பிரதிநிதிகளும், வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லும் பஸ்களின் பின்னால் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்கெண்ணும் நிலையத்தின் இறுதி பொலிஸ் காவலரண் வரையில் குறித்த பிரதிநிதிகள் செல்ல முடியுமென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார். அத்துடன், வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் முறையாக வகையில் இடம்பெறும். நாங்கள் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிப்போம். பெட்டி மாற்றப்படும் என்று இன்னும் யாரும் எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்றால் தயவு செய்து அதனை கைவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும கூறியுள்ளார்.
அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது-தேர்தல் ஆணையாளர்-
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை மறுதினம் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களிக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் தமது வாக்குகளை பதிவு செய்யமுடியும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைளுக்காக பிரதேச மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
மாகாணசபை உறுப்பினர் அனந்தி வீட்டின்மீது கல்வீச்சு-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக அனந்தி சசிதரன் தெரிவிக்கையில், சுழிபுரம் வழக்கம்பரையில் உள்ள எனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 1.30மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டன, இதனையடுத்து உடனடியாக எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து பொலிஸாருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் நேற்று உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் ஒளிப்பரப்பாகியிருந்தது. அது தமது குரல் அல்ல என்றும், அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கட்டணம் செலுத்தியவர்களின் விபரத்தை தரக்கோரியும், அனந்தி ஒன்றை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தபால் மூலம் இன்றும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்-
தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்காக இன்று விசேட வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று தமது தபால் மூல வாக்குகளை வழங்க முடியும். காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையில் தபால் மூல வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு டிசம்பர் 23, 24 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டதுடன் தவிர்க்க முடியாத காரணங்களால் அன்றைய தினம் வாக்களிக்க தவறியவர்களுக்காக டிசம்பர் 30 ஆம் திகதியன்றும் விசேட வாக்களிப்பு நடத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரிகளுக்காக 26 ஆம் திகதியன்று தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அநேகமானோர் அன்றைய தினம் வாக்களிக்க தவறியமையினால் மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கும் முகமாகவே இன்றும் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.
ஆளுங்கட்சிக்கு தாவவில்லையென கூட்டமைப்பு உறுப்பினர்கள் மறுப்பு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், தாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவரும் விளக்கமளித்தனர். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டோம் எனக் கூறிய ஜெ.ஜெயராஜா, ‘எனது தனிப்பட்ட தேவை காரணமாக நான் கொழும்பு சென்றிருந்த தருணத்தில், நான் கட்சி மாறுவதற்காக கொழும்பு சென்றுள்ளேன் என செய்திகள் பரவியுள்ளன’ என்றார். ‘இருந்தும் நான் கட்சி மாறவில்லை. பொய்ப் பரப்புரைகளில் எவரும் ஈடுபடவேண்டாம். நாங்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகவே இருப்போம்’ என கூறியுள்ளார்.
எக்னெலிகொடவுக்காக அலரி மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரகம்-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் இம்மாதத்துடன் 5 வருடங்கள் நிறைவடையும் நிலையில் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறும் கோரி எக்னெலிகொடவின் குடும்பத்தாரும் சிவில் அமைப்புகளும் இணைந்து இன்று முற்பகல் அலரி மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்பு பிரதீப் எக்னெலிகொட காணாமல்போனதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். அவர் அரச தரப்பினரால் கடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்திய அவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமது குடும்பம் பெரும் குடும்பச் சுமைகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எக்னெலிகொடவின் குடும்பத்தினருடன் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சுமார் 2 மணிநேரமாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்விடத்துக்கு வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தபோதும் ஜனாதிபதி வருகை தராததால் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுப்பட்டதாக தெரியவருகின்றது.