மக்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தவும்-சர்வதேச மன்னிப்புச் சபை-

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் அரசியல் பங்குபற்றுல் உரிமையை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது தாக்குதல், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனவே மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் போதே அவர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறையில் ஈடுபடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி உறுப்பினரது வாகனங்களுக்கு தீவைப்பு, பெலியத்தயில் துப்பாக்கிப் பிரயோகம்-

ஹொரனை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் அஜித் நவகமுவ என்பவரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலொரு வாகனம் அவருடையது என்றும் மற்றொன்று நண்பருடையது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை வீட்டில் காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார். துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் கோரிக்கை-

தனக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில் ஊடகங்களூடாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவல் சஜித் பிரேமதாச, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சஜித் பிரேமதாச ஆதரவு வழங்கவுள்ளார் என்றும் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது தனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பம் வழங்குங்கள் என்று, தேர்தல் ஆணையாளரிடம் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், ‘இவ்வாறானதொரு நடவடிக்கை தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தடையானது எனவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்குவது அவசியம்-தேர்தல்கள் செயலகம்-

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான விடுமுறையை பெற்றுச்செல்வதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார் அனைத்து தனியார் நிறுவனங்களும் இந்த சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் இதன்படி வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்காத தனியார் துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

மைத்திரிபாலவின் சகோதரர் பிணையில் விடுதலை-

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான ஷமிந்த சிறிசேன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திம்புலாகல பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான தம்மிக்க நிஷாந்த குமாரகேவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது. இந்நி;லையில் அவர், பொலிஸில் நேற்று ஆஜராகினார். இதனையடுத்து பொலிஸார் அவரை பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் நுவன் தாரக்க கீநெட்டிகல, பிணையில் விடுவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.