ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் விடுத்த அறிக்கை-

Sithar ploteஒரு அரசியல் மாற்றத்தை விரும்பி இலங்கை மக்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். விசேடமாக தமிழ், முஸ்லிம், மலைய மக்கள் ஏகோபித்து வாக்களித்து அவருடைய வெற்றிக்கு வழியமைத்துள்ளார்கள். அத்துடன் பிரத்தியேகமாக வடகிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் மிகப் பெருவாரியாக, கடந்த மாகாண சபைத் தேர்தலிலே வழங்கிய வாக்குகளைவிடவும் அதிகமான வாக்குகளை அளித்து அவருக்கு தங்களுடைய ஏகோபித்த ஆதரவினை தெரிவித்துள்ளார்கள். அத்துடன் தமிழ் மக்கள் இன்று முகம்கொடுக்கின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தங்கள் வாக்குகளை அளித்துள்ளார்கள். இடம்பெயர்ந்து மிக நீண்டகாலமாக தங்களுடைய சொந்த நிலங்களுக்குச் செல்லமுடியாத மக்கள் மீளக் குடியேற வேண்டுமென்ற ஒரு அவாவிலே இருக்கின்றார்கள். சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்கள், அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலை வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அதேவேளையில் காணாமற் போனவர்கள் சம்பந்தமாக ஒரு நியாயமான, நீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கின்றார்கள். இவைகளெல்லாம் உடனடியாகச் செய்ய வேண்டிய விடயங்களாக இருந்தாலும்; காலக்கிரமத்தில் தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் கோரிக்கையான ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வினை எதிர்பார்த்தும் அவர்கள் தமது வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், அதன் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களினதும் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்கள். திரு. இரா.சம்பந்தன் அவர்களின் சாணக்கியமான நகர்வுகள்மூலம் அவர் கூறுவதுபோல, இந்த 2015ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்கள் கௌரவத்துடன் கூடிய ஒரு சமாதான வாழ்வையும் ஒரு அரசியல் தீர்வையும் எட்டுவார்கள் என்று நாம் எதிர்பார்ககின்றோம்.

திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன்,
வட மாகாணசபை உறுப்பினர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
09.01.2015.