Header image alt text

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 41வது சிரார்த்த தினம்-

19741974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 41வது சிரார்த்ததினம் இன்றாகும். 41வது சிரார்த்த தினமான இன்றும் இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வில் எழுத்தாளரும், பதிப்பாளரும், கல்விமானுமாகிய மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கனகரட்ணம் விந்தன், பரஞ்சோதி மற்றும் வலி வடக்கு பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன், வலிவடக்கு உப தவிசாளர் சஜீவன், நல்லூர் பிரதேசசபைத் தலைவர் வசந்தகுமார், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சம்பவங்களை மிகத் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் இந்த நினைவுத் தூபியினை அமைப்பதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகள் பற்றியும், அது பல தடவைகள் அரச படைகளினால் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.
Tamilarasu2TamilarasuTamilarasu1Tamilarasu6Tamilarasu5Tamilarasu3Tamilarasu7

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற பான்கீ மூன் விருப்பம்-

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான முடிவை வழங்கியமை தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் நம்பகமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்தமை தொடர்பில் இலங்கைத் தேர்தல்கள் செயலகத்திற்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி, சமத்துவம் மற்றும் அரசியல் கலந்துரையாடல் போன்ற விடயங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பயணம்- ஐ.டி.என் தலைவர் சிங்கபூர் பயணம்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரான டட்லி ராஜபக்ஷ, இன்று அதிகாலை பாங்கொக் பயணமாகியுள்ளார். அமெரிக்கப் பிரஜையான அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வந்திருந்தார். அதன் பின்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்திலுள்ள அதிசொகுசு அறையில் நான்கு நாட்கள் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், தாய் விமான சேவைக்கு சொந்தமான டி.ஜி.308 என்ற விமானத்திலேயே இன்றையதினம் அதிகாலை 1.30க்கு நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை சுயாதீன தொலைக்காட்சியின் (ஐ.டி.என்) தலைவர் அநுர சிறிவர்தன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார். இலங்கை விமானசேவைக்கு சொந்தமான விமானத்திலேயே சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு செயலாளராக பீ.எம்.யூ.டி பஸ்நாயக நியமனம்-

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக பீ.எம்.யூ.டி பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீ.எம்.யூ.டி பஸ்நாயக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக முன்னதாக செயற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும் – இந்தியா-

இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாகியுள்ளமை, வினைத்திறனான மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான நேர்மையான அடித்தளத்தை இட புதிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர் தீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மறுசீலமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, அனைத்து சமுகங்களுக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார். அதேநேரம் இலங்கையில் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்படுவதற்கு, புதிய அரசாங்கத்தையும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர் தீன் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய அரசின் வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு சின்ஹா சமர்ப்பித்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றபின் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த முதல் வெளிநாட்டு பிரதிநிதி சின்ஹா ஆவார்.

செந்தில் தொண்டமானை கைது செய்வதற்கு நடவடிக்கை-

எல்ல – நியுபேர்க் பகுதியில் வைத்து அஞ்சல் பணியாளர்மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்து வந்த அஞ்சல் பணியாளர் ஒருவரை, எல்ல -நியுபேர்க் நான்காம் கட்டை பிரதேசத்தில் வைத்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் தாக்குதல நடத்தியிருந்தனர். இதற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பில் செந்தில் தொண்டமானை கைதுசெய்ய வலியுறுத்தி அஞ்சல் பணியாளர்களும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இந்நிலையில் அவரை கைது செய்வதற்கான உத்தரவை பண்டாரவளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இதன்படி அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து-

இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜூலி பிஷப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வைத்த நம்பிக்கை காப்பாற்றப்படும்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

நாட்டின் எதிர்காலம் குறித்த மக்கள் வைத்துள்ள நம்பிக்கை உரியவாறு காப்பாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக நேற்றுமாலை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சிறிபவன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுக அபிவிருத்தி தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாரையும் பழிவாங்கப் போவதில்லையெனவும், சிறந்த வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்து சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவிருப்பதாகவும் கூறியுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளராக முன்னாள் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி. அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளராக கடமையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவுக்கு விளக்கமறியல்-

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர (சொக்கா மல்லி) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கஹவத்தைப் பகுதியில் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டமை தொடர்பில், நேற்று இரவு அளுத்கம பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். மேற்படி சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 5ம்திகதி, இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபரை அன்றையதினம் (20ம் திகதி) பெல்மடுலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளமை தெரிந்ததே.