ஜனாதிபதியின் வெற்றிக்கான வாழ்த்தும், தமிழ்பேசும் மக்களின் எதிர்பார்ப்புகளும்- மு.தம்பிராசா-

thambiதமிழ் பேசும் மக்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை நாட்டில் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான விருப்பத்தை தமது அமோக ஆதரவை வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தி நாட்டின் தலைவராக மைத்திரிபால சிறிசேனாவை வெற்றிகொள்ள வைத்துள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மூலம் இலங்கை நாட்டில் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்பதையும் அதற்கு பக்கதுணையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் செயற்படுவார் என்றும் நான் நம்புகிறேன்.

இந்நாட்டில் அறுபது வருட காலத்திற்கும் மேலாக புரையோடிப் போயிருக்கும் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரமான சுகவாழ்வுக்கான இருப்பை உறதி செய்வதற்கான தீர்வை நோக்கி முன்னேறுவதற்கான செயற்பாடுகளை மிக விரைவில் மைத்திரிபால அரசு மேற்கொள்ளும் என்று முழுமையாக நம்புவதோடு, அதற்குரிய அனைத்து செயற்பாடுகளிலும் ‘தமிழ் தேசிய’ கூட்டமைப்பும் தனது முழுமையான ஆதரவுடன் அணிவகுக்கும் என்பதையும் உறுதிசெய்கிறோம்.

இலங்கை தேசத்திலுள்ள அனைத்து சக்திகளும் ஜனாபதியின் வெற்றிக்காகவும் அவர் மூலமாக ஜனநாயகத்தை இலங்கை நாட்டில் மீண்டும் கொண்டுவருவதற்காகவும் ஒன்றாக கைகோர்த்து செயற்பட்டிருந்தனர். அவர்களுடன் ‘தமிழ் தேசிய’ கூட்டமைப்பின் தலைவரின் வேண்டுகோளை அடுத்து தமிழ் தேசமும் அனைத்து வேறுபாடுகளையும், கடந்தகால கசப்பான அனுபவங்கள் அனைத்தையும் மறந்து எமது தேச உறவுகள் சிலரது கோரிக்கைகளையும் புறந்தள்ளி எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி அமோக ஆதரவை வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வரலாறு காணாத வெற்றிக்கு வழிவகுத்திருந்தார்கள்.

முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, முன்னைநாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான அனைத்து சக்திகளின் வேண்டுகோளுக்கும் மீண்டுமொருமுறை கௌரவம் அளித்து ‘தமிழ் தேசிய’ மக்கள் இலங்கை நாட்டில் சிங்கள தேச மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான விருப்பத்தை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தை அனைத்து தலைமைகளும் பயன்படுத்தி ‘தமிழ் தேசியத்’ தையுடைய தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு மிகச் சரியான தீர்வைக் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை நாட்டை மீண்டும் உலக அரங்கில் சரியான நிலைக்கு செல்வார் ஜனாதிபதி என நம்புவோமாக.

கடந்தகால போரினால் முகாம்களில் அகதி வாழ்க்கை வாழ்பவர்களின் நிறுத்தப்பட்ட நிவாரணங்களை மீண்டும் வழங்குவதன்மூலமும் அண்மைய கால இயற்கை அனர்த்தங்களினால் இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் வடகிழக்கு, மலையக தமிழ்பேசும் மக்களின் துன்ப, துயரங்களையும் வாழ்வாதாரங்களையும் விசேடமாக இடம்பெயர்ந்து இருபத்தினான்கு வருட காலமாக அல்லலுறும் வலிவடக்கு, சம்பூர் கிராம மக்களின் அவசரத் தேவையான ‘மீள்குடியேற்றத்தையும்’ அரசியல் கைதிகளின் விடுதலையையும், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும், உயிருடன் சரணடைந்த, உறவுகளினால் உயிருடன் பாரம்கொடுக்கப்பட்ட உறவுகளின் விடுதலையையும் மனிதாபிமான முறையில் பரிசீலனைக்கு எடுத்து, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து எமது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக சூழலை ஏற்படுத்தி அவர்களுக்குத் தகுந்த நிவாரணங்கைள வழங்கி வாழ வழி செய்வார் என நம்புவோமாக.

பலவித அச்சுறுத்தல்கள், உயிராபத்துக்கள் அனைத்தையும் எதிர்கொண்டு பொறுமையுடன் அமைதி காத்து ஜனநாயகத்தை நிலைக்கச்செய்ய புரட்சிசெய்து எமது மக்கள் தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளார்கள்.

எமது மக்களின் சகல நிலைமைகளையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறோம். அத்துடன் எமது மக்களின் மனோநிலைகளையும் அறிந்துகொண்டு ஆக்கபூர்வமாக செயற்படுவார்கள் என நம்புகிறோம்.

அனைத்து மக்களும் மகிழ்வுடனும், சகல உரிமைகளுடனும், இனத் தனித்துவத்துடனுமான சுகவாழ்வை சுதந்திரமாக இலங்கைத் திருநாட்டில் அனுபவிக்க எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரிந்து துணை நிற்பாராக.