ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை- புதிய அமைச்சரவை இன்று நியமனம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கண்டி சிறீ தலதா மாளிகையில் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்காக உரை நிகழத்தவுள்ளார். இதற்காக அவர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து புறப்படவுள்ளார். கண்டி செல்லும்போது, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அவர் அஞ்சலி செலுத்தவும் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்று பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணிக்கும் இதில் அமைச்சுப் பதவிகளை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பூஜித்த அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை, நிதி அமைச்சுகளின் செயலர்கள் நியமனம், ரூபவாஹினி தலைவர் பணியேற்பு-

செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலராக சந்திரசேன மாலியத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கையின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார். இவர், இதற்குமுன் திட்டமிடல் அமைச்சு, அதிவேக நெடுஞ்சாலைகள் அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அரச சேவையில் அவர் 45வருட அனுபவத்தை கொண்டவராவார். இதேவேளை மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சோமரத்தின திஸாநாயக்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கடமையை நேற்றையதினம் மாலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பெசில் ராஜபக்ஷ குடும்பத்தினர், ஆறுமுகன் தொண்டமான் வெளிநாடு பயணம்-

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஷ இன்று அதிகாலை 2.55 அளவில் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.349 என்ற விமானத்தின் ஊடாக அவரும், அவரது பாரியாரும் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் அமெரிக்கா செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது இவ்விதமிருக்க முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான நேற்று அதிகாலை சென்னை புறப்பட்ச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை 6.45 மணியளவில் சென்னைக்கு புறப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்171 விமானத்திலே அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 04.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமையத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதமளவில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவாகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இதன்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் இந்த விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 இந்திய மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரங்களின் இலங்கைக்கான இராஜதந்திரிகள் ஆகியோர் இன்று நாட்டைவிட்டு சென்றுள்ளனர்.

செந்தில் தொண்டமானை கைதுசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்-

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தபாற்காரரான பெரியசாமி ஞானசேகரன், பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துவிட்டு திரும்பிகொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு உள்ளானார். இச்சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகளையும், தன்னுடைய கையடக்கத் தொலைபேசியையும் காணவில்லை என்று தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதேவேளை, செந்தில் தொண்டமானுக்கு எதிராக பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்கதெனியவுக்கு விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு-

புத்தளம் மாவட்டம் சிலாபம், பங்கதெனிய பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் அந்தப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தில், அந்தப் பகுதியில் பிரபலமான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரே கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறிருப்பினும் இது தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்ற சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இதுவரை இரு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அரசியல் நியமனம்பெற்ற வெளிநாடுகளுக்கான தூதுவர்களை பதவிநீக்க நடவடிக்கை-

வெளிநாடுகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றுள்ள 48 தூதுவர்களை எதிர்வரும் மாதம் பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.