பிரதமரின் செயலர் நியமனம், மைத்திரிபாலவின் வெற்றிடத்திற்கு நியமனம், ஷிராணிக்கு பதவி-
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன இந் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு பொலனறுவை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியலில் அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்ற ஜயசிங்க பண்டார நியமிக்கப்படவுள்ளார். இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுக்கொள்வார். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமிப்பேன் என மைத்திரிபாலவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் இழப்பு, தேர்தலின் மோசடி குறித்து விசாரணை-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 17வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறிய நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சுயாதீன வேட்பாளர்கள் இருவரினதும், 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களதும் கட்டுப் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல் ஆணையாளர் யு.அமரதாச இதனைத் தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர்கள் தலா 75 ஆயிரம் ரூபாவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணமாக செலுத்தி இருந்தனர். இதன்படி அவர்களால் செலுத்தப்பட்ட 9 லட்சம் ரூபாய் கட்டுப்பணம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த அரசாங்கம், நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அதிகாரத்தையும், அரச சொத்துக்களையும் பயன்படுத்திய விதம் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதிகார பலம், அரசாங்க சொத்துக்கள், காவற்துறை பலம் என அனைத்தையும் கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைய அனைவரும் ஒன்றிணையுங்கள்-ஜனாதிபதி அழைப்பு-
தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். இந்த நாட்டிலிருக்கின்ற அனைவரும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற இனமத பேதங்கள் பாராது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவமாக இந்த நாட்டில் வாழ வேண்டும். எமது நாட்டைப் பொறுத்த வரையில் பொருளாதாரத்தை அதிகமாக ஈட்டித் தரும் துறையாக விவசாயம் காணப்படுகிறது. எனவே எனது நூறுநாள் வேலைத்திட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும். அத்துடன் சாதாரண மக்களின் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பக்கச்சார்பற்ற பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி இலஞ்சம், ஊழல் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் இல்லாது நாட்டை சமாதான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையில் எமது அரசு ஈடுபடும். சர்வதேசத்திலும், தேசிய ரீதியிலும் இணக்கப்பாட்டை கட்டி எழுப்பி நல்லுறவை பேணுவது எமது தலையாய கடமையாகும் எனவே நாட்டு மக்கள் அனைவரும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றிணைந்து தேசிய அரசினை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். எனது முதலாவதும் இறுதியுமான தேர்தல் இது. இந்த தேசத்திற்கு தேவையானவர் அரசன் அல்ல மாறாக நல்ல ஒரு மனிதனே என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கெரிய மஹாநாயக்கர்களை சந்தித்தனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டனர். இடையில் ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலதா மாளிகையில் மத ஆராதனையில் ஈடுபட்டத்தின் பின்னர் மாஹா நாயக்கர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.