நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமனம்-

நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமை புரிந்த ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டு இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்கின்றார். அரச சேவையிவ் 25வருட கால அனுபவமுள்ள இவர். சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியாவார்.

புதிய ஜனாதிபதி கடமையை பொறுப்பேற்றார்-

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், உயர் தரத்திலான அரச ஊழியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வது அனைவருடைய கடமையாகும். தேர்தல் பிராசாரங்களில் குறிப்பிட்டது போன்று 100 நாட்களில் நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார-

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துகொள்ளப் போவதில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 100 நாட்களை மாத்திரமே கொண்டது. இவற்றின் செயற்பாடுகள் குறுகிய காலத்தை அடிப்படையாhக கொண்டவை. எனவே இந்த அமைச்சரவையில் இணைவது எவ்வித பயனும் இல்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் தொண்டமான் பிணையில் விடுதலை-

தபால் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்று பண்டாரவளை நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவர் ஊடாக சரணடைந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்றுமாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 2லட்சம் ரூபா பெறுமதியா இரு சரீரப் பிணைகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தபால் ஊழியரான பெரியசாமி ஞானசேகரனுக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் ஒன்றை அளிக்குமாறு செந்தில் தொண்டமானுக்கு பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கல்வியமைச்சர் குணவர்தன குடும்பத்துடன் பயணம்-

முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தனது குடும்பத்துடன், இன்று திங்கட்கிழமை சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 எனும் விமானத்தில் அவர் சீனாவுக்கு பயணமானதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.