தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-

tna_pressmeet_002தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார். அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம்; பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்படி, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும். காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு ஆளுநர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அத்துடன் ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக முதலில் வடக்கிற்காவது தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும், வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களை மாற்றுவது தொடர்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், திருகோணமலையில் எட்டுவருட காலமாக இராணுவ அதிகாரி ஒருவர் அரச அதிபராக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மற்றும் சுன்னாகம் மின்சார சபையினால் ஏற்பட்டிருக்கும் கழிவுஎண்ணெய் கசிவானது பல கிராமங்களை பாதித்திருப்பதுடன் அது வடக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இதனால் மேலும் பல கிராமங்களும் பாதிக்கப்பட்டுவருதும், குடிநீர் கெட்டுப்போய், குளிப்பதற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலைமையிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்கப்பட்டது. அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான பாஸ்நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காலக்கிரமத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதற்கு அரச தரப்பினர் பதிலளிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் குழுவொன்றை அமைத்து இடங்களை இனங்கண்டு அவர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர்களை மாற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒன்பது ஆளுநர்களையும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம். ஆகவே ஆளுநர்கள் மாற்றத்தின்போது இந்த விடயமும் கவனத்திற் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான பாஸ் நடைமுறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் குழுவொன்றை நியமித்து அதனூடாக அவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.