பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வந்தடைந்துள்ளர்

pap1பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தலைமையிலான குழுவினர் மூன்று நாள் திருயாத்திரையை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளனர். அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பாரியார் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் மட்டத்திலானவர் வரவேற்றுள்ளனர்
விமானத்திலிருந்து விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைவரை செங்கம்பளம் விரிக்;கப்பட்டிருந்தது. அதன் இருமருங்கிலும் பல்வேறு குழுக்களை பிரதிநித்துவப்படுத்திய நடனக் கலைஞர்கள் நடனமாடி பாப்பரசரை வரவேற்றனர்.
அத்துடன், கடறபடையினர்;, விமான படையினர் அணிவகுத்து நிற்க, படையினரால் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டதுடன் வத்திக்கான், இலங்கை தேசியகீதங்களும் இசைக்கப்பட்டன. பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து பாப்பரசர் விமான நிலையத்திலிருந்து நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். பின்னர் விமானநிலைத்தில் உள்ள விசேட விருந்தினர்கள் கையொப்பமிடும் பொன்னான புத்தகத்தில், பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தனது இலங்கை திருநாட்டுக்கான திருயாத்திரையை பதிவு செய்து கையொப்பமிட்டார்.

pap2அதனையடுத்து இலங்கை இராணுவத்தினரால் 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு அரச மரியாதையளிக்கப்பட்டது. விமானத்திலிருந்து விசேட மேடைவரை இருமருங்கிலும் நின்றிருந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கர்தினால்கள் உள்ளிட்டோரை பாப்பரசர் ஆசீர்வதித்தார்.
பலர் கைலாகு கொடுத்தும் சிலர், பாப்பரசரின் கைக்கு முத்தமிட்டும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர். 
ஆசீர்வதித்த பாப்பரசர், பின்னர், குண்டு துளைக்காத விசேட வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கொழும்பிலுள்ள வத்திக்கான் அப்போஸ்தலிக்கத் தூதரகம் வரை அழைத்துவரப்பட்டார். அங்கு நடைபெற்ற விசேட நிகழ்விலும் கலந்துகொண்டார்.
வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்த மக்கள் தேசிய கொடி, பரிசுத்த பாப்பரசரின் கொடி மற்றும் கொழும்பு மறை மாவட்டத்தின் கொடி ஆகியவற்றை அசைத்து பாப்பரசருக்கு கௌரவம் செய்தனர்.
பாப்பரசரும், ஆசீர்வாதம் அளித்தார். ஒருதடவை வாகனத்தை விட்டு கீழே இறங்கிய பாப்பரசர், அங்கு குழுமியிருந்தவர்களை ஆசீர்வதித்தார். அப்போது பாப்பரசரை நோக்கி மக்கள் கூட்டமாக விரைந்தமையால் பாதுகாப்பு தரப்பினர் திக்குமுக்காடி போயினர்.
அதன்பின்னர், அவர், வாகனத்தில் இருந்தவாறே மக்களை ஆசீர்வதித்தார். இன, மத, மொழி பேதங்களை மறந்து மக்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர், பௌத்த தேரர்களும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, வீதியின் ஒருபுறத்தில் அலங்கரித்து அணிவகுத்து நின்ற யானைகளும் பாப்பரசரை தும்பிக்கைகளை தூக்கி வரவேற்றதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டன.
நேற்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வ மதத் தலைவர்களை பாப்பரசர் சந்தித்தார்.  இந்த சந்திப்பில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மறை மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாப்பரசருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்றது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை வருகை மற்றும் இலங்கையின் புனிதராக இன்று புதன்கிழமை திருநிலைப்படுத்தப்படவுள்ள அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளின் நினைவு முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. அத்துடன் பாப்பரசரின் இலங்கை விஜயத்தை நினைவு கூரும் நாணயக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. காலி முகத்திடலில் இன்று விசேட ஆராதனைகள் மற்றும் திருபலி ஒப்புக்கொடுத்தலுடன் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராக திருநிலைப்படுத்தப்படுவார்
இன்று பிற்பகல் 2 மணிக்கு பாப்பரசர் மன்னார் மடுவுக்கு விஜயம் செய்து. மடு திருத்தலத்தில் விசேட ஆராதனையை நடத்தி, திருப்பலியும்; ஒப்புக்கொடுப்பார். இங்கு கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத மக்களையும் போரால் உடல் நலம் குன்றிய மக்களையும் சந்தித்து தமது உடனிருப்பையும் இறை கரிசனையையும் திருத்தந்தை பிரான்ஸிஸ் வெளிப்படுத்தவுள்ளார்.
இன்று மாலையே கொழும்பு திரும்பும் பாப்பரசர்,  நாளை 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு பிலிப்பைன்ஸ் புறப்படுவார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வழியில்  முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பரின் நினைவாக பேவலலானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்விக் கல்லூரியை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதுடன். பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் ஆசியாவுக்கான ஐந்து நாட்களில் புனித யாத்திரையில் மூன்று நாட்கள் பாப்பரசரின் இலங்கைக்கான திருயாத்திரை நிறைவடையும்.