ஜனாதிபதியின் ஆலோசகர்களாக மூவர் நியமனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களாக ஒஸ்டின் பெர்ணான்டோ, திலக் ரணவிராஜா, டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரட்ண ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு. அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கி வைத்தார்.
அரச சேவையில் பல அனுபவகங்களை கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராவார்.
பல தசாப்தங்களாக அரச உயர்பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான திலக் ரணவிராஜா, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம், தபால் மற்றும் தொலைத்தொடர்புகள், வைத்திய மற்றும் சுதேச வைத்திய, ஊடகம், சமூக நலன்புரி, மகாவலி, நீர்வழங்கல், மின்சக்தி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல அமைச்சுகளில் செயலாளராக கடமையாற்றியுள்ளார். அத்துடன் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றில் அவர், உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான டப்ளியு. ஜே.எஸ் கருணாரத்ன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றினார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஒப்படைக்க தயார் மஹிந்த ராஜபக்ஷ
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மாகாண சபை உறுப்பினரான உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானத்தை மேல்மாகாண முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பார் என்று கூறப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு இன்று வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளது. கொழும்பு, விஜேராமவிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.