யாழ். சுன்னாகத்தில் மின்நிறுவனத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

chunnagamயாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை அங்கிருந்து அகற்று வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமது பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகித்து வந்த நொதெர்ன் பவர் என்ற இந்த நிறுவனத்தின் மின்நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தில் ஊறி கிணற்று நீருடன் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
இதனால் வலிகாமம் வடக்கு பகுதியின் பல பகுதிகளில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் கிணறுகளிலும் எண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உண்மை நிலையைக் கண்டறிந்துள்ள போதிலும், நொதெர்ன் பவர் மின் நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன், வலிகாமம் பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஊர் மக்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, குறித்த பிரதேசத்தில் குடிநீருடன் எண்ணெய் கலப்பதற்கு தங்களின் மின்நிலையம் காரணமல்ல என்றும் நீதவான் தலைமையில் நடந்த சோதனை நடவடிக்கையின்போது, தங்களின் நிறுவனத்திலிருந்து எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் நொதெர்ன் பவர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா கூறியுள்ளார்.

வடக்கைப் போல கிழக்கிலும் புதிய ஆளுநர் நியமனமாவார்- சம்பந்தன்

 
sampanthanஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் ததேகூ தலைவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.

மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் நடவடிக்கைகள் மாகாணசபையின் நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு தொடர்ந்து நிலவுவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, முன்னாள் கடற்படை அதிகாரியான மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்தும் பணியாற்றுவது சுதந்திரமான சிவில் நிர்வாகத்துக்கு தடையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.