பைஸர் முஸ்தபா, ரோசி சேனாநாயக்க கடமைகள் பொறுப்பேற்பு-
விமான சேவைகள் இராஜங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். பத்தரமுல்லை- செத்சிரிபாயவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கடந்த அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராக பைஸர் முஸ்தபா பதவி வகித்திருந்தார். இதேவேளை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். செத்சிரியாபவில் உள்ள சிறுவர் விவகார அமைச்சு அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பளராகவும் ரோஸி சேனாநாயக்க செயற்பட்டு வருகின்றார். இதேவேளை ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். பல்வேறு அழுத்தங்கள் வந்தபோதிலும் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக ஊவா முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பு அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை-
எந்த தருணத்திலும் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால், அதன்பொருட்;டு தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்புகள் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அடுத்த தேர்தலில் வாக்களிப்பின்போது தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இதைவிட மேலதிக வாய்ப்புகளை வழங்க முடியும், 100 நாட்கள் அல்ல 10 நாட்களிலும் தேர்தல் நடத்த எம்மால் முடியும். இன்று தேர்தல் வைக்கவேண்டும் என்று கோரினாலும் எம்மால் தேர்தல் ஒன்றுக்கு சொல்ல முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை ஆளுநர் பதவி விலகல்-
மத்திய மாகாண சபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் ஆளுநராக 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகின்றது. டிக்கிரி கொப்பேகடுவ கண்டி மாநகர சபையின் அமைச்சராகவும் இருந்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு தாயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.